SA vs WI : சிக்சர் மழை பொழிந்த தென்னாபிரிக்கா – வெஸ்ட் இண்டீஸ், ஜோடியாக சேர்ந்து 3 புதிய உலக சாதனை

WI vs RSA
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அதில் முதல் போட்டியில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற நிலையில் சொந்த மண்ணில் தொடரை வெல்ல மார்ச் 26ஆம் தேதியன்று செஞ்சூரியனில் நடைபெற்ற 2வது போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. ஆனால்  சுமாராக பந்து வீசிய தென் ஆப்பிரிக்க பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 258/5 ரன்கள் குவித்தது.

அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய அதிகபட்ச ஸ்கோரையும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரையும் பதிவு செய்து வெஸ்ட் இண்டீஸ் உலக சாதனை படைத்தது. அந்த அணிக்கு 39 பந்திலேயே சதமடித்த ஜான்சன் சார்லஸ் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற கிறிஸ் கெயில் (47) சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்து 10 பவுண்டரி 11 சிக்சருடன் 118 (46) ரன்கள் விளாசினார். அவருடன் கெய்ல் மேயர்ஸ் 51 (27) ரொமரியா செபார்ட் 41* (18) ரோவ்மன் போவல் 28 (19) என இதர வீரர்களும் அதிரடியாக ர்ன்களை குவித்த நிலையில் தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக மார்கோ யான்சென் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

உலக சாதனை போட்டி:
அதை தொடர்ந்து 259 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்கா சொந்த மண்ணில் நீங்களே இப்படி அடித்தால் நாங்கள் சும்மா விடுவோமா என்பது போல் பந்து வீச்சில் வாங்கிய அத்தனை அடியையும் பதிலடியாக பேட்டிங்கில் வெஸ்ட் இண்டீஸை முரட்டுத்தனமாக அடித்தது. குறிப்பாக குயின்டன் டீ காக் – ரீசா ஹென்றிக்ஸ் ஆகியோர் 6 ஓவரிலேயே 102/0 ரன்கள் விளாசினர். அதனால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பவர் பிளே ஓவர்களில் 100+ ரன்களை அடித்த முதல் அணியாக தென்னாப்பிரிக்கா உலக சாதனை படைத்தது.

அதே வேகத்தில் 152 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்த அந்த ஜோடியில் குயின்டன் டீ காக் 9 பவுண்டரி 8 சிக்ஸருடன் சதமடித்து 100 (44) ரன்களும் ரீசா ஹென்றிக்ஸ் 11 பவுண்டரி 2 சிக்சருடன் 68 (28) ரன்களும் எடுத்து அவுட்டானார்கள். மிடில் ஆர்டரில் ரிலீ ரோசவ் 16 (4), டேவிட் மில்லர் 10 (10) என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் இறுதியில் கேப்டன் ஐடன் மார்க்ரம் 38* (21) ரன்களும் ஹென்றிச் க்ளாஸென் 16* (7) ரன்களும் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தனர்.

- Advertisement -

அதனால் 18.5 ஓவரிலேயே 259/4 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற தென்னாப்பிரிக்கா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 250+ ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்த முதல் அணி மற்றும் அதிகபட்ச ஸ்கோரை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி ஆகிய இரட்டை உலக சாதனைகளை படைத்து 1 – 1* (3) என்ற கணக்கில் இத்தொடரை சமன் செய்து வெஸ்ட் இண்டீஸ்க்கு தக்க பதிலடி கொடுத்தது.

குறிப்பாக 2005ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகப்பட்ச ஸ்கோரை சேசிங் செய்து ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனை படைத்தது போல் டி20 கிரிக்கெட்டிலும் தென்னாப்பிரிக்கா உலக சாதனை படைத்துள்ளது. அப்படி சாதனைக்கு மேல் சாதனை படைத்த இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் 22 சிக்ஸர்கள் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் 13 சிக்ஸர்கள் என மொத்தம் 35 சிக்ஸர்களை பறக்க விட்டு ஜோடியாக ரசிகர்களை மகிழ்வித்தனர்.

- Advertisement -

1. அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்ட போட்டியாக இந்த போட்டி உலக சாதனை படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. தென்னாபிரிக்கா – வெஸ்ட் இண்டீஸ் : 35 சிக்ஸர்கள், 2023*
2. செர்பியா – பல்கேரியா : 33 சிக்ஸர்கள், 2022
3. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் : 32 சிக்ஸர்கள், 2016

2. அத்துடன் வெஸ்ட் இண்டீஸ் 258, தென் ஆப்பிரிக்கா 259 என இரு அணிகளும் சேர்ந்து இந்த போட்டியில் 517 ரன்கள் குவித்தன. அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக 500 ரன்கள் கடந்த போட்டியாகவும் இந்த போட்டி உலக சாதனை படைத்தது.

இதையும் படிங்க:பும்ரா மட்டும் விளையாடலானா இந்தியாவின் அந்த கனவு பலிக்காது – இலங்கை வீரர் அதிரடி கருத்து

3. மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவிக்கப்பட்ட போட்டியாகவும் இந்த போட்டி உலக சாதனை படைத்தது. இதற்கு முன் 2022இல் செர்பியா (242/4) மற்றும் பல்கேரியா (246/4) மோதிய போட்டி 490 ரன்கள் அடிக்கப்பட்டதே முந்தைய சாதனையாகும்.

Advertisement