
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையுடன் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவி காலம் நிறைவு பெறுகிறது. கடந்த 2021 டி20 உலகக் கோப்பைக்கு பின் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற அவருடைய தலைமையில் இந்தியா ஐசிசி தொடர்களில் தோல்விகளை மட்டுமே சந்தித்தது. அதனால் புதிய பயிற்சியாளரை நியமிப்பதற்கான வேலைகளில் பிசிசிஐ களமிறங்கியுள்ளது.
அந்த பதவிக்கு ரிக்கி பாண்டிங், ஸ்டீபன் பிளம்மிங், விவிஎஸ் லக்ஷ்மன் போன்ற ஜாம்பவான் வீரர்களை நியமிக்க பிசிசிஐ விரும்பியதாக செய்திகள் வெளிவந்தன. அதை விட ஐபிஎல் 2024 தொடரில் கொல்கத்தா அணி 10 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்வதற்கு ஆலோசகராக செயல்பட்ட கௌதம் கம்பீர் முக்கிய பங்காற்றினார். அத்துடன் 2007 மற்றும் 2011 உலகக் கோப்பைகளை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் வீரராகவும் பயிற்சியாளராகவும் மிகப்பெரிய அனுபவத்தை கொண்டுள்ளார்.
கங்குலி எதிர்ப்பா:
எனவே அவரை பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ அணுகியதாக செய்திகள் வந்தன. சொல்லப்போனால் 2024 ஐபிஎல் கோப்பையை வென்றதும் அவரிடம் சென்னையில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பேச்சுவார்த்தை நடத்தினார். அதனால் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளரை புத்திசாலித்தனமாக தேர்வு செய்ய வேண்டும் என்று பிசிசிஐக்கு முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ஒருவரின் வாழ்க்கையில் பயிற்சியாளரின் முக்கியத்துவம், வழிகாட்டுதல் இடைவிடாத பயிற்சி ஆகியவையால் எந்த ஒரு நபரின் எதிர்காலத்தை களத்திலும் களத்திற்கு வெளியேயும் சிறப்பாக வடிவமைக்கின்றன”
“எனவே பயிற்சியாளர் மற்றும் நிறுவனத்தை புத்திசாலித்தனமாக தேர்வு செய்யவும்” என்று கூறியுள்ளார். இதை பார்க்கும் ரசிகர்கள் கங்குலி எதிர்ப்பு தெரிவிக்கிறாரா என்று சந்தேகத்தை வெளிப்படுத்துகின்றனர். குறிப்பாக கம்பீர் மற்றும் விராட் கோலி ஆகியோரிடையே வாக்குவாதமும் சண்டையும் காணப்படுகிறது. மறுபுறம் 2007இல் நியமிக்கப்பட்ட கிரேக் சேப்பலுடன் அப்போதைய கேப்டன் கங்குலிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையும் படிங்க: யுவி மாஸ்டர்க்ளாஸ்.. மிரட்டிய ஸ்ரீசாந்த்.. ஆஸியை வீட்டுக்கு அனுப்பிய தோனியின் படை.. டி20 உ.கோ ரீவைண்ட்
அது இந்தியாவுக்கு 2007 உலகக் கோப்பையில் மிகப்பெரிய தோல்வியை பரிசோதித்தது. எனவே ஆக்ரோஷமாக செயல்படக்கூடிய கம்பீர் – விராட் கோலி போன்ற வீரர்களுடன் இணைந்து செயல்படுவாரா என்பதை யோசித்து முடிவெடுக்குமாறு கங்குலி மறைமுகமாக கூறியுள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர். அத்துடன் 2024 ஐபிஎல் கோப்பையை கம்பீர் தலைமையில் கொல்கத்தா வென்றதற்காக இதுவரை கங்குலி ஒரு வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை. அந்த சூழ்நிலையில் கங்குலி வெளியிட்டுள்ள இந்த பதிவு அந்த சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது.