
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா தற்போது சுமாரான ஃபார்மில் இருக்கிறார். குறிப்பாக சமீபத்திய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது. அதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறாமல் முதல் முறையாக இந்தியா வெளியேறியது. அந்தத் தொடர்களில் ரோகித் சர்மா கேப்டனாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
அதை விட பேட்டிங்கில் மோசமாக விளையாடிய அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசிப் போட்டியில் தன்னைத்தானே நீக்கிக்கொண்ட முதல் இந்திய கேப்டனாக மோசமான சாதனை படைத்தார். அதனால் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ள அவர் அடுத்ததாக ரஞ்சிக் கோப்பையில் விளையாட உள்ளார். அதில் ஃபார்மை மீட்டெடுத்து அடுத்ததாக நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியில் ரோகித் சர்மா அசத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபியில் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் மற்றும் பேட்டிங் மீண்டும் பளபளக்கும் என்று சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். அத்துடன் வெளிநாட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இன்னிங்ஸில் 300 – 400 ரன்கள் அடிப்பதே வெற்றிக்கான முதல் படி என்றும் அவர் கூறியுள்ளார். அதைக் கடந்த தொடர்களில் செய்யத் தவறியதே இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் ஒரு அணியாக இந்தியா இருக்கும் என்று நினைக்கிறேன். ரோகித் சர்மா வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அபரிதமானவர். சாம்பியன்ஸ் டிராபி துவங்கியதும் நீங்கள் வித்தியாசமான ரோகித் சர்மாவை பார்ப்பீர்கள். ஏற்கனவே சொன்னது போல் இந்தியா அந்த கோப்பையை வெல்லக்கூடிய ஒரு அணியாக இருக்கும்”
“ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்து ஸ்விங் ஆகக்கூடிய ஆடுகளங்களில் அவர்கள் தற்போது வெளிப்படுத்தியதை விட இன்னும் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். டெஸ்ட் போட்டிகளில் சொந்த மண்ணுக்கு வெளியே முதலில் இன்னிங்ஸில் நீங்கள் 350 – 400 ரன்கள் அடித்தாலே வெற்றி பெறக்கூடிய சூழ்நிலைக்கு வந்து விடுவீர்கள் என்று நான் எப்போதும் சொல்லி வருகிறேன்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: அந்த 2 உ.கோ மாதிரி ரோஹித், கோலிக்கு இது தெரியும்.. இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தும்.. ஹர்பஜன் சிங்
இதைத் தொடர்ந்து இந்திய அணி இங்கிலாந்து தொடரை முடித்துக் கொண்டு சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட உள்ளது. அதில் 2013க்குப்பின் 12 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஜூன் மாதம் இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.