நேரம் வரும்போது பார்முக்கு வந்துருவாங்க, அவங்கள பத்தி கவலை வேண்டாம் – கங்குலி கருத்து

Ganguly (2)
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் துவங்கி ஒரு மாதங்களுக்கும் மேலாக ரசிகர்களை பல எதிர்பாராத திருப்பங்களுடன் மகிழ்வித்து இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. இந்த தொடரில் அதிக கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணிகளாக சாதனை படைத்துள்ள மும்பையும் சென்னையும் ஆரம்பம் முதலே தொடர் தோல்விகளால் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் முதல் 2 அணிகளாக வெளியேறியது ரசிகர்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சியாக இருந்தது. அதைவிட இந்தியாவின் டாப் 2 நட்சத்திரங்களான ரோஹித் சர்மாவும் – விராட் கோலியும் மோசமான பார்மில் ரன்கள் எடுக்க முடியாமல் திணறுவது அதிர்ச்சியாகவும் கவலையாகவும் அமைந்துள்ளது.

Virat Kohli Rohit Sharma MI vs RCB

- Advertisement -

ஏனெனில் 2008 முதல் தங்களது அபார திறமையால் இதே ஐபிஎல் தொடரில் ஆயிரக்கணக்கில் ரன் மழை பொழிந்து அதன் வாயிலாக இந்திய அணியிலும் காலடி வைத்து பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த இவர்கள் தற்போதைய இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக பார்க்கப்படுகிறார்கள். அதிலும் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள், அதிக சதங்கள் அடித்த இந்திய பேட்ஸ்மன் போன்ற பல சாதனைகளைப் படைத்த விராட் கோலி இம்முறை 3 முறை கோல்டன் டக் அவுட்டாகி மோசமான பார்ம் அவுட்டில் உள்ளார்.

பாரமின்றி ரோஹித் – விராட்:
ஏற்கனவே 70 சதங்களை அடித்து சச்சினுக்கு பின் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வரும் விராட் கோலி கடந்த 2019க்கு பின் டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக 106* போட்டிகளாக சதம் அடிக்க முடியாமல் திண்டாடி வருகிறார். இந்த வருடம் இதுவரை பங்கேற்ற 13 போட்டிகளில் 236 ரன்களை வெறும் 19.67 என்ற மோசமான சராசரியில் 113.46 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து திணறி வருகிறார். 3 வருடங்களாகியும் பார்முக்கு திரும்ப முடியாத அவருக்கு 2 – 3 மாதங்கள் தற்காலிக ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் திரும்புமாறு ரவிசாஸ்திரி உட்பட பலரும் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

Ganguly

அதேபோல் மற்றொரு நட்சத்திரம் ரோகித் சர்மா இதுவரை பங்கேற்ற 12 போட்டிகளில் 218 ரன்களை வெறும் 18.17 என்ற மோசமான சராசரியில் எடுத்து ஒரு அரைசதம் கூட அடிக்க முடியாமல் தவித்து வருகிறார். அவரின் இந்த மோசமான பேட்டிங் அவர் கேப்டனாக வழிநடத்தும் மும்பையின் வெற்றியில் வெகுவாக எதிரொலித்து முதல் அணியாக வெளியேற முக்கிய பங்காற்றியது. மொத்தத்தில் இந்தியாவின் முன்னாள் கேப்டன் விராட் கோலியும் இந்நாள் கேப்டன் ரோகித் சர்மாவும் மோசமான பார்மில் தவிப்பது இந்திய கிரிக்கெட்டுக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

கவலை வேண்டாம்:
குறிப்பாக வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை நடைபெறுவதற்கு முன்பாக இவர்களின் இந்த திண்டாட்டம் ரசிகர்களுக்கு பெரிய கவலையாக மாறியுள்ளது. இந்நிலையில் இந்த இருவருமே உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் என்பதால் நேரம் வரும் போது குறிப்பாக டி20 உலகக் கோப்பையின் போது பார்முக்கு திரும்பி விடுவார்கள் என்று பிசிசிஐ தலைவர் மற்றும் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Rohith-1

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரோஹித் மற்றும் விராட் ஆகியோரின் பார்ம் பற்றி நான் பெரிய அளவில் கவலைப்படவில்லை. அவர்கள் நல்ல நிலைமையில் உள்ளனர். அவர்கள் மிகப் பெரிய வீரர்கள். உலகக் கோப்பைக்கு இன்னும் நிறைய நேரங்கள் உள்ளது. எனவே உலக கோப்பைக்கு முன்பாக அவர்கள் தங்களை டாப் பார்முக்கு சரிப்படுத்தி விடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உறுதியாக உள்ளது” என்று கூறினார்.

- Advertisement -

நாட்கள் இருக்கு:
விராட் – ரோஹித் போன்ற கிளாஸ் நிறைந்த உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களுக்கு பார்முக்கு திரும்புவது பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை எனக்கூறும் சௌரவ் கங்குலி அவர்கள் மிகப் பெரிய வீரர்கள் என்பதால் நிச்சயம் உலக கோப்பைக்கு முன்பாக பார்முக்கு திரும்பிவிடுவார்கள் என்று நம்பிக்கையும் ஆதரவும் தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் 3 மாதங்களுக்கு மேல் உள்ளதால் அதற்கு முன்பாக அவர்கள் கண்டிப்பாக நல்ல நிலைமைக்கு வந்து விடுவார்கள் என தெரிவித்துள்ள கங்குலி அதற்காக இந்திய ரசிகர்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க : 160 ரன்களே இலக்கு என்றாலும் பலம் வாய்ந்த பஞ்சாப் அணியை வீழ்த்திய டெல்லி அணி – நடந்தது என்ன?

ஐபிஎல் தொடர் முடிந்த பின் நடைபெறும் தென் ஆப்ரிக்க தொடரில் ரோகித் சர்மா – விராட் கோலி ஆகிய இருவருக்குமே ஓய்வு அளிக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே அதில் ஓய்வெடுத்துவிட்டு புத்துணர்ச்சியுடன் அதன்பின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது மீண்டும் இந்திய அணியுடன் இணையும் அவர்கள் இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, ஆசிய கோப்பை போன்ற அடுத்தடுத்த தொடர்களில் விளையாட உள்ளனர். எனவே அக்டோபர் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக அந்த தொடர்களின் வாயிலாக நிச்சயம் அவர்கள் பார்முக்கு திரும்பி விடுவார்கள் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement