160 ரன்களே இலக்கு என்றாலும் பலம் வாய்ந்த பஞ்சாப் அணியை வீழ்த்திய டெல்லி அணி – நடந்தது என்ன?

Kuldeep Yadav
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்று போட்டிகள் உச்சகட்டத்தை தொட்டுள்ள நிலையில் மே 16-ஆம் தேதி நடைபெற்ற 64-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இவ்விரு அணிகளுமே புள்ளி பட்டியலில் தலா 12 புள்ளிகளுடன் பெற்றிருந்ததால் இந்த போட்டியில் வென்றால் மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் இரு அணிகளும் மோதின. நவி மும்பையில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய டெல்லிக்கு முதல் பந்திலேயே அதிரடி வீரர் டேவிட் வார்னர் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

Sharfraz Khan DC vs PBKS

- Advertisement -

இருப்பினும் அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் உடன் கை கோர்த்த மற்றொரு இளம் தொடக்க வீரர் சர்ப்ராஸ் கான் 2-வது விக்கெட்டுக்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை செய்தபோது 5 பவுண்டரி 1 சிக்சருடன் 32 (16) ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் களமிறங்கிய லலித் யாதவ் தனது பங்கிற்கு 24 (21) ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற அடுத்து வந்த கேப்டன் ரிஷப் பண்ட் 7 (3) ரோவ்மன் போவல் 2 (6) என முக்கிய வீரர்கள் அதிரடி காட்டாமல் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.

இலக்கு 160:
அதனால் 112/5 என திணறிய டெல்லிக்கு நல்ல வேளையாக மறுபுறம் தொடர்ந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய மிட்செல் மார்ஷ் 4 பவுண்டரி 3 சிக்சருடன் அரைசதம் கடந்து 63 (48) ரன்கள் எடுத்து காப்பாற்றி கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். இறுதியில் அக்சர் பட்டேல் 17* (20) ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்த டெல்லி போராடி 159 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக லியம் லிவிங்ஸ்டன் மற்றும் அர்ஷிதீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

Mitchell Marsh 63

அதை தொடர்ந்து 160 என்ற இலக்கை துரத்திய 4 பவுண்டரி 1 சிக்சருடன் 28 (15) ரன்களை அதிரடியாக எடுத்த தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ அவுட்டாக அடுத்து வந்த பனுக்கா ராஜபக்சா 4 (5) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். அந்த சமயத்தில் மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவானும் 19 (16) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுக்க அப்போது களமிறங்கிய கேப்டன் மயங் அகர்வாலும் டக் அவுட்டாகி மாபெரும் அதிர்ச்சி கொடுத்தார்.

- Advertisement -

போராடிய ஜிதேஷ்:
அதனால் 6.3 ஓவரில் 55/4 என மோசமான தொடக்கத்தை பெற்ற பஞ்சாப்பை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட அந்த அணியின் அதிரடி நம்பிக்கை நட்சத்திர வீரர் லியம் லிவிங்ஸ்டனும் 3 (5) ரன்களில் அவுட்டாகி கைவிட்டதால் தோல்வி உறுதியானது. ஆனாலும் கடைசி நேரத்தில் 3 பவுண்டரி 2 சிக்சர்களை பறக்கவிட்ட ஜிதேஷ் சர்மா அதிரடியாக 44 (34) ரன்கள் எடுத்து வெற்றிக்கான நம்பிக்கை கொடுத்து போராடி ஆட்டமிழந்தார்.

Jitesh Sharma

அவருக்கு பின் கடைசியில் ராகுல் சஹார் அதிரடியாக 25* (20) ரன்கள் எடுத்தாலும் 20 ஓவர்களில் 142/9 ரன்களை மட்டுமே எடுத்த பஞ்சாப் பரிதாபமாக தோற்றது. அதனால் 17 ரன்கள் வித்யாத்தில் சூப்பர் வெற்றி பெற்ற டெல்லிக்கு பந்துவீச்சில் அதிகபட்சமாக ஷார்துல் தாகூர் 4 விக்கெட்டுகளையும் அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்து வெற்றியை உறுதி செய்தனர். இதனால் பங்கேற்ற 13 போட்டிகளில் 7-வது வெற்றியை பதிவு செய்த அந்த அணி 14 புள்ளிகளுடன் பெங்களூருவை பின்னுக்கு தள்ளி புள்ளி பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறி பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

அசத்திய டெல்லி:
தங்களது பேட்டிங் பலத்தால் அசால்டாக 200 ரன்களையே சேசிங் செய்யக்கூடிய பஞ்சாப் அணியில் ஜானி பேர்ஸ்டோ, லியம் லிவிங்ஸ்டன் ஆகிய இரு துருவங்களையும் குறிபார்த்து அடித்த டெல்லி பவுலர்கள் பெரிய ரன்களை எடுக்க விடாமல் ஆரம்பத்திலேயே மடக்கிப்பிடித்தனர். அதேபோல் ஷிகர் தவானையும் அதிக நேரம் களத்தில் இருக்க விடாமல் 20 ரன்களை தாண்ட விடாமல் காலி செய்த அந்த அணி பவுலர்கள் ராஜபக்சா, கேப்டன் மயங்க் அகர்வால் ஆகிய எஞ்சிய அதிரடி வீரர்களையும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் செய்து வெற்றியை உறுதி செய்தார்கள்.

dcvspbks

ஒருவேளை மிடில் ஆர்டரில் லிவிங்ஸ்டன் – மயங்க் அகர்வால் ஆகியோர் குறைந்தது 15 – 20 ரன்கள் என்ற கணிசமான அடித்திருந்தால் கூட பஞ்சாப் எளிதாக வெற்றி பெற்றிருக்கும். எப்படியோ இந்த முக்கிய போட்டியில் பந்துவீச்சில் அசத்தினாலும் 160 என்ற நல்ல எளிமையான இலக்கை கூட துரத்திப் பிடிக்க தவறிய பஞ்சாப் பங்கேற்ற 13 போட்டிகளில் 7-வது தோல்வியை பதிவு செய்து தொடர்ந்து 7-வது இடத்தில் நீடிக்கிறது. இனிமேல் எஞ்சிய 1 போட்டியில் வென்றாலும் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்வது 90% கடினமாகும்.

Advertisement