ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தடுமாற்றமாக விளையாடி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் தவித்து வருகிறது. அந்தத் தொடரில் முன்னாள் கேப்டன் தோனி பேட்டிங்கில் கடைசக்கட்ட ஓவர்களில் மட்டுமே விளையாடுவது வெற்றிக்கு உதவவில்லை. அதனால் 43 வயதில் விளையாடாமல் காலம் கடந்த தோனி ஓய்வு பெற்று வீட்டில் உட்கார வேண்டும் என்று எதிரணி ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
உண்மையில் டாப் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன்கள் தடுமாறுகிறார்கள். அதனால் கடைசியில் தோனி நிதானமாக விளையாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார். அதே சமயம் ஒரு கட்டத்திற்கு பின் அவர் அதிரடியாக விளையாடத் தடுமாறுவது சென்னை அணியின் வெற்றிக்கு உதவவில்லை.
கேப்டன் தோனி:
இப்படிப்பட்ட சூழ்நிலையில் சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயத்தால் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 2005இல் தாம் பார்த்த தோனியால் 43 வயதில் இப்போதும் அதிரடியாக விளையாட முடியாது என்று ஜாம்பவான் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். அதே சமயம் இப்போதும் சிக்சர்களைப் பறக்க விடும் திறன் தோனியிடம் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் தோனி ஐபிஎல் தொடரில் சாதாரண வீரராக விளையாடுவதை விட கேப்டனாக விளையாடுவது தான் சரியானது என்று கங்குலி கூறியுள்ளார். அந்த வாய்ப்பில் தோனி மிருகம் (ஃபீஸ்ட்) போல அசத்துவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள கங்குலி இது பற்றி பேசியது பின்வருமாறு. “எம்எஸ் தோனியால் இப்போதும் சிக்ஸர்களை அடிக்க முடியும் என்பதை மற்றொருப் போட்டியில் நாம் பார்த்தோம்”
கங்குலி நம்பிக்கை:
“43 வயதாகும் எம்எஸ் தோனி 2005இல் நான் பார்த்தது போல இப்போதும் அசத்துவார் என்று எதிர்பார்க்க முடியாது. அது இயற்கையானது. ஆனால் இப்போதும் அவர் பௌண்டரி எல்லைகளைத் தாண்டிப் பந்துகளை பறக்க விடும் பவரைக் கொண்டுள்ளார். பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் தோனி விளையாடுவதை நான் பார்த்தேன்”
இதையும் படிங்க: தோனிக்காக காயம் என்ற பெயரில் ருதுராஜ் நீக்கப்பட்டாரா? காயமடைந்தது எப்படி? பிளெமிங் விளக்கம்
“அதில் தோனி சில சிக்ஸர்களை அடித்தார். தன்னிடம் கொண்டுள்ள அனுபவம், சாதித்துள்ள விஷயங்கள் ஆகியவற்றால் தோனிக்கு மற்றவர்களைக் காட்டிலும் சிஎஸ்கே அணிக்கு எது சிறந்ததாக இருக்கும் என்பது தெரியும். ஒருவேளை அவர் சிஎஸ்கே அணிக்காக விளையாடினால் அது கேப்டனாக தான் இருக்க வேண்டும். ஏனெனில் தோனி கேப்டனாக முற்றிலும் மாறுபட்ட மிருகத்தைப் போல செயல்படக்கூடியவர்” என்று கூறினார்.



