
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் கேரியரை முடிக்க தேர்வுக்குழு தயாராகி விட்டது. 2023 உலகக் கோப்பையில் காயத்துடன் நெருப்பாக பந்து வீசிய அவர் இந்தியா ஃபைனல் செல்ல முக்கிய பங்காற்றினார். அதன் பின் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவரால் கடந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் வரை விளையாட முடியவில்லை.
இறுதியில் ஒரு வழியாக குணமடைந்த அவர் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் தேர்வாகி 8 விக்கெட்டுகள் எடுத்து இந்தியா கோப்பையை வெல்ல தம்முடைய பங்காற்றினர். ஆனால் அடுத்து நடைபெற்ற இங்கிலாந்து (டெஸ்ட்), வெஸ்ட் இண்டீஸ் (டெஸ்ட்), ஆஸ்திரேலியா (ஒருநாள்) தொடர்களில் முகமது ஷமி ஃபிட்டாக இல்லை என்று சொல்லி தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கழற்றி விட்டார்.
அதற்கு ரஞ்சிக் கோப்பையில் விளையாடும் தம்மால் இந்தியாவுக்காக விளையாட முடியாதா? என்று ஷமி அதிருப்தியை வெளிப்படுத்தினார். அது பற்றி கேட்டதற்கு ஒருவேளை ஷமி ஃபிட்டாக இருந்தால் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற இந்திய அணியின் விமானத்தில் இருந்திருப்பார் என்று அகர்கர் மீண்டும் பதிலளித்தார். அதற்கு ரஞ்சிக் கோப்பையில் விளையாட ஃபிட்டாக இருக்கும் தம்மால் ஒருநாள் போட்டியில் விளையாட முடியாதா? என்று ஷமி மீண்டும் வினவினார்.
அத்துடன் 2025/26 ரஞ்சிக் கோப்பையில் முதல் 2 போட்டிகளில் 15 விக்கெட்டுகள் எடுத்த அவர் பெங்கால் அடுத்தடுத்த 2 வெற்றிகளைப் பெற்ற முக்கிய பங்காற்றினார். ஆனால் எதிர்த்து பேசியக் காரணத்தால் அடுத்ததாக நடைபெறும் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரிலும் முகமது ஷமியை தேர்வுக்குழு கழற்றி விட்டுள்ளது. அதனால் அவருடைய கேரியரை தேர்வுக்குழு முடித்து வைத்துள்ளது என்றே நம்பப்படுகிறது.
இந்நிலையில் ஃபிட்னஸை நிரூபித்த பின்பும் ஷமியை கழற்றி விடுவது சரியல்ல என்று ஜாம்பவான் சௌரவ் கங்குலி கூறியுள்ளார். இது பற்றி அஜித் அகர்கரை சாடும் வகையில் அவர் பேசியது பின்வருமாறு. “ஷமி மிகவும் சிறப்பாக பந்து வீசுகிறார். அவர் ஃபிட்டாக இருப்பதை நாம் இதுவரை நடந்த 3 ரஞ்சி போட்டிகளில் பார்த்தோம். அந்தப் போட்டிகளில் அவரும் பெங்கால் அணியும் வெற்றி பெற்றார்கள்”
இதையும் படிங்க: அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் பெஞ்சில் அமர வைக்கப்பட்டு.. ராணா செலக்ட்டானது ஏன்? கம்பீர் பேட்டி
“அவருடைய ஆட்டத்தை தேர்வாளர்கள் பார்ப்பார்கள் என்று நான் நம்புகிறேன். தேர்வாளர்களுக்கும் ஷமிக்கும் இடையே தொடர்பு இருக்க வேண்டும். என்னைக் கேட்டால் ஃபிட்னஸ் மற்றும் திறமை அடிப்படையில் ஷமியை பற்றி நமக்குத் தெரியும். எனவே டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக அவரால் விளையாட முடியாது என்று சொல்வதற்கான காரணத்தை என்னால் பார்க்க முடியவில்லை. ஏனெனில் அவரிடம் மகத்தான திறன் இருக்கிறது” என்று கூறினார்.