தென்னாப்பிரிக்காவில் எஸ்ஏ20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அத்தொடரில் 2025 சீசனுக்கான வீரர்கள் ஏலம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்ஸ்பர்க் நகரில் நடைபெற்றது. அந்த ஏலத்தில் 22 வயதாகும் இளம் தென்னாபிரிக்க வீரர் தேவால்ட் ப்ரேவிஸ் 16.5 மில்லியன் ரண்ட் அதாவது 8.13 கோடி என்ற பெரிய தொகைக்கு பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்காக வாங்கப்பட்டார்.
அதன் வாயிலாக தென்னாபிரிக்க தொடரில் அதிக தொகைக்கு விலை போன வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். ஐசிசி 2022 அண்டர்-19 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த ப்ரேவிஸ் 2025 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக விளையாடி தன்னை நம்பிக்கை நட்சத்திரமாக அடையாளப்படுத்தினார். அத்துடன் சமீப மாதங்களில் தென்னாப்பிரிக்காவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அவர் சிறப்பாக விளையாடி வருகிறார்.
எப்படி பழிவாங்குனேன் பாத்தீங்களா:
அதனால் எஸ்ஏ20 தொடரிலும் அவரை வாங்க சிஎஸ்கே அணியின் கிளையான ஜேஎஸ்கே அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் போட்டி போட்டார். ஆனால் அவருக்கு பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட சௌரவ் கங்குலி பதிலுக்கு போட்டி கொடுத்தார். மறுபுறம் சிஎஸ்கே அணியில் சிறப்பாக விளையாடும் ப்ரேவிஸை விடக்கூடாது என்ற நோக்கத்தில் பிளமிங் தொடர்ந்து ஏலம் கேட்டார்.
ஆனாலும் அதற்கு விட்டுக் கொடுக்காத கங்குலி 16.5 மில்லியன் ரண்ட் என்ற உச்சபட்ச தொகைக்கு விலை கேட்டார். அதனால் வேறு வழியின்றி பிளமிங் தங்களுடைய ஏலத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தார். அந்த நிலையில் ப்ரேவிஸை வாங்க அதிகபட்சமாக எவ்வளவு தொகையை ஒதுக்கி வைத்திருந்தீர்கள்? என்று பிரிட்டோரியா பயிற்சியாளர் கங்குலியிடம் செய்தியாளர்கள் கேட்டார்கள்.
கங்குலி கலகலப்பு:
அதற்கு பிளெமிங்கை தோற்கடித்து பழி தீர்க்கும் வரை பணத்தைப் பற்றி கவலைப்படாமல் ஏலம் கேட்க முடிவெடுத்ததாக கங்குலி கலகலப்பாக தெரிவித்தார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நியூசிலாந்துக்கு நாங்கள் (இந்தியா) சென்ற போது பிளெமிங் நியூசிலாந்தின் கேப்டனாக என்னை பலமுறை அவுட்டாக்கியுள்ளார் என்பது உங்களுக்குத் தெரியும்”
இதையும் படிங்க: 3 விக்கெட்ஸ்.. சகோதரர் பாண்டியாவுடன் போட்டியில்ல.. என் பவுலிங் முன்னேற அந்த 2 பேர் தான் காரணம்.. துபே பேட்டி
“நியூசிலாந்தில் பசுமையான வேகத்துக்கு சாதகமான பிட்ச்களில் அவர் என்னைச் சுற்றி ஃபீல்டர்களை நிற்க வைத்து தொடர்ச்சியாக அனைத்து நேரங்களிலும் பந்து வீசுவார். எனவே இது அவரை தோற்கடிக்க எங்களுக்கு கிடைத்த நல்வாய்ப்பாகும். நாங்கள் அவரை முந்தினோம்” என்று சொன்னார். அதை அருகில் அமர்ந்து கொண்டு கேட்ட பிளெமிங் சிரிப்பான ரியாக்சனை கொடுத்தார்.



