இந்தியாவுக்கு கங்குலி என்னை அழைத்தார், ஆனால் அந்த பயத்தால் போகல – ரமீஸ் ராஜா ஓபன்டாக்

Ramiz Raja Sourav Ganguly
- Advertisement -

ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு கட்டத்தில் கிரிக்கெட்டில் நட்பு நாடுகளாக இருந்தன. ஆனால் அரசியலில் ஏற்பட்ட எல்லைப் பிரச்சினை காரணமாக இரு நாட்டுக்கிடையே ஏற்பட்ட மிகப் பெரிய விரிசல் கிரிக்கெட்டிலும் எதிரொலித்தது. அதன் காரணமாக கடந்த பல வருடங்களாக இவ்விரு நாடுகளும் மற்றொரு நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடுவதை அறவே தவிர்த்து விட்டன. கடைசியாக கடந்த 2012இல் இந்தியாவுக்கு வந்து ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பாகிஸ்தான் பங்கேற்றது.

IND vs PAK 2012

- Advertisement -

அதன்பின் கடந்த 10 வருடங்களாக ஐசிசி நடத்தும் உலக கோப்பைகளிலும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் ஆசிய கோப்பையில் மட்டுமே இவ்விரு அணிகளும் மோதி வருகின்றன. அதே பிரச்சனை இவ்விரு நாடுகள் நடத்தும் உள்ளூர் டி20 தொடர்களான ஐபிஎல் மற்றும் பிஎஸ்எல் தொடரிலும் வலுவாக எதிரொலித்துள்ளது. ஆம் 2008இல் ஐபிஎல் துவங்கப்பட்ட போது சோயப் அக்தர், சாகித் அப்ரிடி உட்பட நிறைய பாகிஸ்தான் நட்சத்திரங்கள் இந்திய மண்ணில் ஐபிஎல் தொடரில் பங்கேற்றனர்.

சண்டையும் சச்சரவும்:
ஆனால் 2010க்கு பின் எல்லைப் பிரச்சனைகள் காரணமாக அந்நாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க பிசிசிஐ விதித்த தடை இதுநாள் வரை தொடர்கிறது. அதனால் கடுப்பான பாகிஸ்தான் ஒரு கட்டத்தில் தங்களது நாட்டில் ஐபிஎல் தொடரை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கு தடை விதித்தது. அதுபோக ஐபிஎல் தொடரை பாகிஸ்தானிலிருந்து யாருமே பார்க்க கூடாது என்ற வகையில் அந்நாட்டை சேர்ந்த பெரும்பாலான ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் தங்களுக்குத் தாங்களே உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் தங்கள் நாட்டைச் சேர்ந்த ஏதாவது பிரபலம் ஐபிஎல் தொடரை பார்த்து தெரியாத தனமாய் புகழ்ந்து பாராட்டினால் உடனே அவர்கள் மீது சமூக வலைதளங்களில் பாயக்கூடியவர்களாகவும் இருந்து வருகின்றனர்.

shoaib akhtar sachin tendulkar

அத்துடன் போட்டியாக பிஎஸ்எல் எனும் தொடரை தொடங்கி ஐபிஎல் தொடரை விட எங்களின் பிஎஸ்எல் தான் பெரிது என்று மார்தட்டும் அவர்கள் சமீப காலங்களில் விராட் கோலி, ரோஹித் சர்மாவை விட எங்களின் பாபர் அசாம், முஹம்மது ரிஸ்வான் ஆகியோரே தரமானவர்கள் என்று வகை வகையாக பகையை வெளிப்படுத்தி வருகிறார்கள். இப்படி ஆழ்மனதில் பகை உருவாகியுள்ளதால் இரு நாடுகளும் மீண்டும் கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக அவ்வப்போது நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த வருகின்றன.

- Advertisement -

கங்குலியின் அழைப்பு:
இந்நிலையில் புகழ்பெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்காக நட்பு ரீதியில் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தம்மை 2 முறை அழைத்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஷ் ராஜா தெரிவித்துள்ளார். ஆனால் இந்தியாவுக்கு சென்று ஐபிஎல் தொடரை பார்த்தால் தங்களது நாட்டு ரசிகர்கள் தம்மை சும்மா விடமாட்டார்கள் என்ற பயத்தால் அவரின் அழைப்பை ஏற்க முடியாமல் போய்விட்டதாக தெரிவித்த அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “அவ்வப்போது சௌரவ் கங்குலியுடன் நான் பேச்சுவார்த்தையில் இருந்து வருகிறேன். அவரிடம் தற்சமயம் 2 – 3 கிரிக்கெட்டர்கள் எங்கள் வாரியத்தின் தலைவர்களாக இருப்பதாக கூறிக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை வித்தியாசத்தை எங்களால் கொண்டுவர முடியவில்லையெனில் என்ன பயன்?”

Ramiz-Raja

“துரதிஷ்டவசமாக அவருக்கும் ஒருசில பிரச்சனைகளை இருந்தது. 2 தருணங்களில் அவர் என்னை ஐபிஎல் தொடருக்கு அழைத்திருந்தார். துபாய் ஐபிஎல் தொடருக்கும் இந்த வருட ஐபிஎல் தொடருக்கும் அவர் என்னை அழைத்திருந்தார். இருப்பினும் அதில் பங்கேற்கலாமா வேண்டாமா என்று நான் குழம்பினேன். ஏனெனில் அதில் பங்கேற்றால் (பாகிஸ்தான்) ரசிகர்கள் என்னை சும்மா விடமாட்டார்கள். கிரிக்கெட் ரீதியில் ஐபிஎல் தொடரில் பங்கேற்கலாம். ஆனால் தற்போது அரசியல் ரீதியாக நிறைய பிளவுகள் இருப்பதால் அதை சரி செய்ய வேண்டியுள்ளது” என்று கூறினார்.

- Advertisement -

இந்தியா மட்டுமல்லாது தீவிரவாத பிரச்சனைகள் காரணமாக கடந்த பல வருடங்களாக பாகிஸ்தானுக்கு செல்வதை பல வெளிநாடுகள் தவிர்த்து வந்தன. ஆனால் பாதுகாப்பு அம்சங்களை பல மடங்கு உயர்த்தியுள்ள பாகிஸ்தான் ஆஸ்திரேலியா, இலங்கை போன்ற நாடுகளை மீண்டும் தங்களது மண்ணில் சமீபத்தில் விளையாட வைத்து வெற்றி கண்டுள்ளது. அதில் மிகப்பெரிய முயற்சியாக வரும் 2025இல் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியை தங்களது நாட்டில் நடத்தும் உரிமையை போராடி பெற்றுள்ள அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதன் வாயிலாக உலக நாடுகள் தங்களது நாட்டுக்கு வந்து மீண்டும் கிரிக்கெட் விளையாடும் என்று மகிழ்ச்சியுடன் உள்ளது.

இதையும் படிங்க : போட்டிக்கு ஆள் வந்ததும் இப்படி ஒரு ஆட்டமா ! உஷாரான பண்ட், வலுவான நிலையில் இந்தியா – முழுவிவரம்

இது பற்றி ரமீஷ் ராஜா மேலும் தெரிவித்தது பின்வருமாறு. “இது வெறும் கிரிக்கெட் போட்டொயாக இருந்தால் 2 நிமிடத்தில் தீர்வு கண்டுவிட முடியும். 2025 சாம்பியன்ஸ் டிராபி உரிமையைப் பெற்றுள்ள நாங்கள் அனைவரும் பாகிஸ்தானில் விளையாடுவதற்கான தடையை உடைத்துள்ளோம். எனவே அது போன்ற உலகத்தரம் வாய்ந்த தொடரை பாகிஸ்தான் ரசிகர்கள் மீண்டும் பார்க்க முடியும்” என்று கூறினார்.

Advertisement