ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் நடைபெற்று முடிந்த 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்று அசத்தியது. ஆனாலும் இந்த தொடருக்கு முன்னதாக நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் என அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்திய அணியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை முதல் முறையாக தவறவிட்டது.
ரோஹித் சர்மாவிற்கு அறிவுரை கூறிய சவுரவ் கங்குலி :
டி20 மற்றும் ஒருநாள் கோப்பைகளை கைப்பற்றிய இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரையும் கைப்பற்ற வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள வேளையில் 2027-ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் சுழற்சி வரும் ஜூன் மாதம் முதல் ஆரம்பிக்க இருக்கிறது. அந்த வகையில் அந்த சுழற்சியில் இந்திய அணி தங்களது முதலாவது டெஸ்ட் தொடராக இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.
ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு இந்திய அணி இங்கிலாந்து சென்று அங்கு நடைபெறவுள்ள இந்த ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாற்றத்தை சந்தித்து வருவதால் அடுத்த தொடரை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பது குறித்து எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் சமீப காலமாகவே பேட்டிங் ஃபார்மில் தடுமாற்றத்தை சந்தித்து வரும் ரோகித் சர்மா இங்கிலாந்தில் சிறப்பாக விளையாட வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து அவருக்கு அட்வைஸ் செய்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் நிச்சயமாக ரோகித் சர்மா பெரிய உயரத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார். அதில் எந்த சந்தேகமும் இல்லை ஆனால் ஒரு பேட்ஸ்மேனாக அவர் கடந்த நான்கு ஆண்டுகளாக பெரிய அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்களை குவிக்கவில்லை.
எனவே இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் அவருக்கு மிக முக்கியமான தொடராக மாறியுள்ளது. அதேவேளையில் இங்கிலாந்து மண்ணில் பந்து நிறைய ஸ்விங் ஆகும் என்பதனால் ரோஹித் சர்மா அதனை சமாளித்து எப்படி விளையாட வேண்டும் என்ற வழியை கண்டுபிடிக்க வேண்டும். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர் ஸ்விங் ஆகும் பந்துகளை அடிக்க ஆசைப்படாமல் மைதானத்தின் தன்மையை அறிந்து அதற்கு ஏற்றார்போல் விளையாட வேண்டியது அவசியம்.
இதையும் படிங்க : எனக்கு குடுத்த அந்த ஆதரவு இவருக்கும் தாங்க.. ரசிகர்கள் மத்தயில் பட்டிதாருக்கு ஆதரவாக பேசிய – விராட் கோலி
அதோடு அதிரடியான ஆட்டத்தை காட்டிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிலைத்து நின்று ஆட வேண்டியது அவசியம். வெளிநாட்டு மண்ணில் நமது அணி 400 முதல் 500 ரன்கள் அடித்தால் தான் அது வெற்றிக்கு போதுமான ரன்களாக இருக்கும் என கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.