
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் துவங்கியது. அந்தத் தொடரில் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது. சொல்லப்போனால் நியூசிலாந்துக்கு எதிராக சமீபத்தில் சந்தித்த தோல்வியால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்குச் செல்ல ஆஸ்திரேலியாவில் 4 போட்டிகளை வெல்லும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்திய அணியின் நம்பிக்கை நாயகன் விராட் கோலி சுமாரான ஃபார்மில் இருப்பது ரசிகர்களுக்கு கவலையை கொடுக்கிறது. குறிப்பாக கடந்த ஐந்து வருடங்களில் விராட் கோலி 3 டெஸ்ட் சதங்கள் மட்டுமே அடித்துள்ளது கவலையை கொடுப்பதாக ரிக்கி பாண்டிங் தெரிவித்திருந்தார். இந்நிலையில் விராட் கோலி வயதாகி விட்டதாக யாரும் குறைவாக எடை போட வேண்டாமென சௌரவ் கங்குலி கூறியுள்ளார்.
மேலும் 2007க்குப்பின் வெளிநாடுகளில் ராகுல் டிராவிட் சதமடிக்க முடியாமல் தடுமாறியதாக கங்குலி நினைவு கூர்ந்துள்ளார். ஆனால் அப்போது இங்கிலாந்தில் நடைபெற்ற 2011 டெஸ்ட் தொடரில் டிராவிட் 3 சதங்கள் அடித்து சாம்பியன் வீரராக விடைபெற்றதாக கங்குலி தெரிவித்துள்ளார். அதே போல விராட் கோலியும் அசத்துவார் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
“மகத்தான வீரர்களை நான் எப்போதும் குறைத்து மதிப்பிடுவதில்லை. சமீப காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு நல்ல காலம் இல்லை. அதனாலேயே ஆஸ்திரேலியாவில் முன்னதாகவே காலடி வைத்த அவர் இங்கே அசத்துவதற்கான பசியுடன் இருக்கிறார். இங்கே அவர் நல்ல ஆடுகளங்களில் விளையாடுவார்”
“ஆஸ்திரேலியாவில் அவர் 13 போட்டிகளில் 6 டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார். ஆம் அது 4 – 5 வருடங்களுக்கு முன்பாக இளம் விராட் கோலி அடித்தது. தற்போது அவருக்கு வயதாகி விட்டது. 2007 – 2011 வரை ராகுல் டிராவிட் வெளிநாடுகளில் சதமடிக்காமல் தடுமாறிய போது இங்கிலாந்துக்கு சென்றார். அவரை லார்ட்ஸ் மைதானத்தில் நான் சந்தித்தேன்”
இதையும் படிங்க: இந்தியாவை அவ்ளோ குறைவா நினைக்காதீங்க.. பும்ரா, கோலி இல்லாமையே ஜெயிச்சோம்.. கங்குலி பதிலடி
“அந்த நேரத்தில் நான் ஓய்வு பெற்றிருந்தேன். எனவே நீங்கள் எவ்வளவு காலம் விளையாடுவீர்கள் என்று அவரிடம் நான் கேட்டேன். அதற்கு ரன்கள் குவிக்க முடியும் என்று நம்பும் வரை விளையாட உள்ளதாக டிராவிட் சொன்னார். அந்தத் தொடரில் அவர் 3 சதங்கள் அடித்தார். குறிப்பாக துவக்க வீரராக விளையாடி அத்தொடரில் அவர் சதத்தை அடித்ததை மறக்காதீர்கள்” என்று கூறினார்.