2017 முதல் கொஞ்சமும் மாறாத அதே சொதப்பல், தங்கத்தை தவறவிட்ட இந்திய மகளிரணி – கங்குலி, அசாருதீன் அதிருப்தி கருத்து

Indian Womens Harmanpreet Kaur Shafali Varma
- Advertisement -

இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் 2022 போட்டிகளில் வரலாற்றிலேயே முதல் முறையாக மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் சேர்க்கப்பட்டது. உலகின் டாப் 8 அணிகள் கடந்த ஜூலை 29 முதல் மோதி வந்த லீக் சுற்று போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. அதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற்ற அரையிறுதியில் இங்கிலாந்தை தோற்கடித்த இந்தியாவும் நியூசிலாந்தை தோற்கடித்த ஆஸ்திரேலியாவும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.

அதற்கு முன்பாக நடந்த 3-வது இடத்துக்கான போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்த நியூஸிலாந்து வெண்கல பதக்கம் வென்றது. அந்த நிலைமையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 5 உலக கோப்பைகளை வென்று டி20 சாம்பியனாக திகழும் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 161/8 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு பெத் மூனியுடன் ஜோடி சேர்ந்து 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்த கேப்டன் மெக் லென்னிங் 36 (26) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

கையிலிருந்த வெற்றி:
மறுபுறம் அசத்தலாக செயல்பட்ட பெத் மூனி 8 பவுண்டரியுடன் 61 (41) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க் இறுதியில் ரீச்சல் ஹெய்ன்ஸ் 18* (10) எடுத்தார். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ரேணுகா சிங் மற்றும் ஸ்னே ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதை தொடர்ந்து 162 ரன்கள் துரத்திய இந்தியாவுக்கு நட்சத்திர இந்திய வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா 6 (7) ஷபாலி வர்மா 11 (7) என ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர்.

அதனால் 22/2 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற இந்தியாவுக்கு அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் ஜெமிமா உடன் இணைந்து 96 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார். அப்போது ஜெமிமா ரோட்ரிகஸ் 33 (33) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த பூஜா 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார். அந்த நிலைமையில் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 65 (43) ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடிய ஹர்மன்பிரீட் கவூர் ஆட்டமிழந்ததை பயன்படுத்திய ஆஸ்திரேலியா அடுத்து வந்த வீராங்கனைகளை அடுத்தடுத்து அவுட் செய்தனர்.

- Advertisement -

மாறாத அதே சொதப்பல்கள்:
அதனால் 118/2 என ஒரு கட்டத்தில் வெற்றியை கையில் வைத்திருந்த இந்தியா 19.3 ஓவரில் 152 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று தங்கத்தை ஆஸ்திரேலியாவுக்கு தாரை வார்த்து வெள்ளியை மட்டுமே வென்றது இந்திய ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது. ஏனெனில் வரலாற்றில் இதுவரை ஒரு ஐசிசி உலகக் கோப்பையை கூட வெல்லாத இந்தியா இந்த தங்கத்தை வென்றிருந்தால் மகளிர் கிரிக்கெட்டில் நிச்சயமாக மறுமலர்ச்சியும் புரட்சியும் ஏற்படுத்த உந்து கோலாக அமைந்திருக்கும். அதைவிட சமீப காலங்களில் இதேபோல் சொதப்பி வெற்றிகளை தவறவிட்ட மகளிரணி அதிலிருந்து கற்றப் பாடத்தில் கொஞ்சமும் முன்னேறாமல் திரும்பத் திரும்ப அதே சொதப்பல்களை செய்வது ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது.

1. ஏனெனில் 2017இல் நடந்த 50 ஓவர் மகளிர் உலகக் கோப்பையில் இங்கிலாந்து நிர்ணயித்த 229 ரன்கள் துரத்திய இந்தியா பூனம் ரௌட் 86, ஹர்மன்பிரீட் கவூர் 35 ஆகியோர் நல்ல ரன்களை எடுத்ததால் 191/3 என வெற்றியை நோக்கி பயணித்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட அழுத்தத்தை சமாளிக்காமல் அடுத்து வந்த வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானதால் இதேபோல மிகச் சரியாக 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா கோப்பையை தாரை வார்த்தது.

- Advertisement -

2. 2018 டி20 உலகக் கோப்பை அரை இறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஒரு கட்டத்தில் 93/3 என்ற நிலையில் இருந்தது. ஆனால் மீண்டும் சொதப்பியதால் 112 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பின்னர் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

3. அதேபோல் 2020 டி20 உலக கோப்பை ஃபைனலில் ஆஸ்திரேலியாவை 185 ரன்களை துரத்திய இந்தியா ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து 85 ரன்களில் தோற்றது.

கங்குலி அதிருப்தி:
தற்போதும் அதேபோல் தோற்றுள்ள இந்தியா 2017 – 2022 வரை 3 ஃபைனல்களில் சொதப்பி தோற்று வருகிறது. குறிப்பாக நேற்றைய போட்டியில் இந்தியா தோற்றத்தை பார்த்த முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீன் மோசமான பேட்டிங் என்று சாடியுள்ளார். இது பற்றி தனது டுவிட்டரில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு.

“பொது அறிவு கூட இல்லாமல் குப்பையான பேட்டிங் செய்த இந்திய அணி வெற்றி பெற வேண்டிய போட்டியை கோட்டை விட்டது” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல் இப்போட்டியில் வெள்ளி வென்றாலும் தங்கத்தை வெல்லாதது ஏமாற்றமளிப்பதாக முன்னாள் இந்திய ஜாம்பவான் கேப்டன் மற்றும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement