
ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்த இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இலங்கைக்கு எதிராக 5 டி20 போட்டிகளில் விளையாடுகின்றது. அத்தொடரின் முதல் 3 போட்டிகளிலும் ஹாட்ரிக் வெற்றிகளைப் பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. அந்த நிலைமையில் 4வது போட்டி திருவனந்தபுரத்தில் இரவு 7 மணிக்கு துவங்கியது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி இலங்கை பவுலர்களை அடித்து நொறுக்கி 20 ஓவரில் 221/2 ரன்களை குவித்து அசத்தியது. இந்திய அணிக்கு ஷபாலி வர்மா – ஸ்மிருதி மந்தனா ஜோடி 162 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அபார துவக்கம் கொடுத்தது.
அதில் ஷபாலி வர்மா 12 பவுண்டரி 1 சிக்ஸருடன் 79 (46) ரன்கள் விளாசி அசத்தினார். அவருடன் இணைந்து அசத்திய மந்தனாவும் 11 பவுண்டரி 3 சிக்ஸருடன் 80 (48) ரன்கள் விளாசினார். அவர்களை விட லோயர் ஆர்டரில் தெறிக்க விடமாட்டத்தை வெளிப்படுத்திய ரிச்சா கோஸ் 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 40* (16) ரன்களை விளாசி ஃபினிஷிங் கொடுத்தார்.
அவருடன் கேப்டன் ஹர்மன்பிரீத் 16* (10) ரன்கள் எடுத்து அசத்தினார். அதன் வாயிலாக இந்திய அணி மகளிர் டி20 கிரிக்கெட்டில் தங்களது அதிகபட்ச ஸ்கோர் (221/2) பதிவு செய்து சாதனையும் படைத்தது. இலங்கை அணிக்கு நிம்மிஷா மதுசாணி, மல்ஷா ஷேஹானி தலா 1 விக்கெட் எடுத்தனர்.
முன்னதாக இந்தப் போட்டியில் அடித்த 80 ரன்களையும் சேர்த்து மந்தனா டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து விதமான சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 10000 ரன்கள் கடந்துள்ளார். அதன் வாயிலாக மிதாலி ராஜுக்கு பின் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 10000 ரன்கள் அடித்த 2வது இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அத்துடன் மித்தாலி, சார்லட் எட்வர்ட்ஸ், சுசி பேட்ஸ் ஆகியோருக்கு பின் உலகளவில் 10,000 ரன்கள் அடித்த 4வது வீராங்கனை என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார்.
இதையும் படிங்க: 221 ரன்ஸ்.. ஆசையாக வந்த இலங்கையை நொறுக்கிய இந்திய மகளிரணி.. புதிய சாதனை ஸ்கோர்
அந்த 10000 ரன்களை அவர் 279 இன்னிங்ஸில் அடித்துள்ளார். அதன் வாயிலாக சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் வேகமாக 10000 ரன்கள் அடித்த வீராங்கனை என்ற உலக சாதனையையும் மந்தனா நிகழ்த்தியுள்ளார். அந்தப் பட்டியல் (இன்னிங்ஸ்):
1. ஸ்மிரிதி மந்தனா (இந்தியா): 279
2. மித்தாலி ராஜ் (இந்தியா): 291
3. சார்லட் எட்வர்ட்ஸ் (இங்கிலாந்து): 308
4. சுசி பேட்ஸ் (நியூஸிலாந்து): 314