221 ரன்ஸ்.. ஆசையாக வந்த இலங்கையை நொறுக்கிய இந்திய மகளிரணி.. புதிய சாதனை ஸ்கோர்

IND vs SL
- Advertisement -

ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பையை முதல் முறையாக வென்ற இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இலங்கைக்கு எதிராக 5 டி20 போட்டிகளில் விளையாடுகின்றது. அந்தத் தொடரில் முதல் 3 போட்டிகளிலும் ஹாட்ரிக் வெற்றிகளைப் பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. அந்த நிலையில் 4வது போட்டி டிசம்பர் 28ஆம் தேதி திருவனந்தபுரத்தில் இரவு 7:00 மணிக்கு துவங்கியது.

அப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் ஸ்மிருதி மந்தனா – ஷபாலி வர்மா பவர்பிளே ஓவர்களில் இலங்கையைப் பந்தாடினார்கள். ஒவ்வொரு ஓவரிலும் 10 ரன்கள் வீதம் குவித்த அந்த ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கம் கொடுத்தது.

- Advertisement -

நொறுக்கிய இந்தியா:

பவர்பிளே முடிந்தும் அதிரடி காட்டிய அந்த ஜோடியில் இருவருமே அரை சதமடித்து இலங்கையை வெளுத்து வாங்கினார்கள். நேரம் செல்ல செல்ல அதிரடியை குறைக்காத அந்த ஜோடி 15.2 ஓவரில் 162 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு அற்புதமான துவக்கத்தைக் கொடுத்து பிரிந்தது. அதில் ஷபாலி வர்மா 12 பவுண்டரி 1 சிக்ஸருடன் 79 (46) ரன்கள் விளாசி அவுட்டானார்.

அடுத்த ஓவரிலேயே மறுபுறம் அசத்திய மந்தனாவும் 11 பவுண்டரி 3 சிக்ஸருடன் 80 (46) ரன்கள் விளாசினார். ஆனால் அடுத்து வந்த ரிச்சா கோஸ் இலங்கையை அடித்து நொறுக்கி 4 பவுண்டரி 3 சிக்சருடன் 40* (16) ரன்கள் விளாசி ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் ஹர்மன்பிரீத் தம்முடைய பங்கிற்கு 16* (10) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

சாதனை ஸ்கோர்:

அதன் காரணமாக 20 ஓவரில் இந்தியா 221/2 ரன்கள் குவித்து அசத்தியது. இதன் வாயிலாக ஒரு சர்வதேச மகளிர் டி20 போட்டியில் இந்தியா தங்களது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 2024ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒரு போட்டியில் இந்தியா 217/4 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.

இதையும் படிங்க: டி20 உ.கோ கருத்தில் கொண்டு நியூசிலாந்து தொடரில் 2 வீரர்களுக்கு ஓய்வு – நிர்வாகம் எடுத்துள்ள முடிவு

மறுபுறம் இத்தொடரின் முதல் 3 போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 150 ரன்கள் கூட தாண்டாமல் தோற்றது. இருப்பினும் இப்போட்டியில் டாஸ் வென்ற அந்த அணி முதலில் பந்து வீசி இந்தியாவை 150க்குள் கட்டுப்படுத்தி வெல்லலாம் என்ற ஆசையுடன் வந்தது. ஆனால் பந்து வீச்சிலும் இலங்கையை அடித்து நொறுக்கிய இந்திய மகளிரணி அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. இலங்கை அணிக்கு நிமாஷா மதுசாணி, மல்ஷா ஷேஹனி தலா 1 விக்கெட் எடுத்தனர்.

Advertisement