
ஐசிசி 2025 மகளிர் உலகக்கோப்பையில் அக்டோபர் 12ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் 13வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்ட நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா அதிரடியாக விளையாட முயற்சித்து 48.5 ஓவரில் 320 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.
இந்திய அணிக்கு 155 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்த பிரதிகா ராவல் 75, ஸ்ம்ரிதி மந்தனா 80 ரன்கள் குவித்தனர். ஆனால் மிடில் ஆர்டரில் ஹர்லீன் தியோல் 38, கேப்டன் ஹர்மன்ப்ரீத் 22, ஜெமிமா 33, ரிச்சா கோஸ் 31, அமன்ஜோத் கௌர் 16 ரன்கள் மட்டுமே எடுத்தனர். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக அனபெல் சதர்லாந்து 5 விக்கெட்டுகள் எடுத்தார்.
இருப்பினும் இப்போட்டியில் ஐசிசி மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியா தங்களுடைய அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 2022 மகளிர் உலகக் கோப்பையில் ஹமில்டன் கிரிக்கெட் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இந்தியா 317/8 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. அத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மகளிர் உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாக இந்தியா 300க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து மற்றொரு சாதனை படைத்துள்ளது.
அதே போல இப்போட்டியில் அடித்த 80 ரன்களையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் மந்தனா 112 இன்னிங்சில் 5000 ரன்கள் கடந்துள்ளார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் வேகமாக 5000 ரன்கள் குவித்த இந்திய கிரிக்கெட்டர் என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார். அந்தப் பட்டியல் (இன்னிங்ஸ்):
1. ஸ்மிரிதி மந்தனா: 112
2. விராட் கோலி: 114
3. ஷிகர் தவான்: 118
மேலும் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் வேகமாக 5000 ரன்கள் அடித்த வீராங்கனை என்ற உலக சாதனையையும் மந்தனா படைத்துள்ளார். அந்தப் பட்டியல் (இன்னிங்ஸ்):
1. ஸ்மிரிதி மந்தனா (இந்தியா): 112
2. ஸ்டாபானி டெய்லர் (வெஸ்ட் இண்டீஸ்): 129
3. சுசி பேட்ஸ் (நியூஸிலாந்து): 136
4. மித்தாலி ராஜ் (இந்தியா): 143
5. சார்லட் எட்வரஸ் (இங்கிலாந்து)
இதையும் படிங்க: 81 ஓவர்ஸ்.. வெ.இ டெய்ல் எண்டர்களை பார்க்காமல்.. ஃபாலோ ஆன் கொடுத்து தவறு செய்த கம்பீர் – கில்?
இது போக மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் 5000 ரன்கள் குவித்த வீராங்கனை என்ற உலக சாதனையையும் மந்தனா படைத்துள்ளார். அத்துடன் மகளிர் ஒருநாள் போட்டிகளில் ஒரு காலண்டர் வருடத்தில் 1000 ரன்கள் அடித்த முதல் வீராங்கனை என்ற உலக சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் 1997ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க் 970 ரன்கள் அடித்ததே முந்தைய அதிகபட்சமாகும்.