TNPL 2023 : சொந்த மண்ணில் சேலத்தை சுருட்டி வீசி வீரத்தை காட்டிய மதுரை – முதல் வெற்றியை பெற்றது எப்படி

TNPL 15
- Advertisement -

தமிழகத்தில் நடைபெற்று வரும் 2023 டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ஜூன் 24ஆம் தேதி இரவு 7.15 மணிக்கு சேலத்தில் இருக்கும் எஸ்சிஎஃப் மைதானத்தில் நடைபெற்ற 15வது லீக் போட்டியில் மதுரை பேன்தர்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து சொந்த ஊரில் களமிறங்கிய சேலத்திற்கு முதல் ஓவரிலேயே ஆகாஷ் சும்ரா டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுக்க அடுத்து வந்த கௌஷிக் காந்தி 3 (4) மான் பாஃப்னா 1 (2) அபிஷேக் 0 (2) என முக்கிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர்.

போதாக்குறைக்கு மறுபுறம் நங்கூரத்தை போட முயன்ற அமித் சாத்விக் 17 (25) ரன்களில் அவுட்டாகி சென்ற நிலையில் அட்னன் கான் 8 (10) கௌரி சங்கர் 17 (34) என மேற்கொண்டு எந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாலும் நிலைத்து நின்று ரன்கள் குவிக்க முடியாத அளவுக்கு மதுரை பந்து வீச்சில் மிரட்டியது. அதற்கு பதில் சொல்ல முடியாத சேலம் 19.4 ஓவரில் ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 98 ரன்களுக்கு சுருண்டு ஆரம்பத்திலேயே வெற்றியை கோட்டை விட்டது.

- Advertisement -

எளிதான வெற்றி:
அந்தளவுக்கு பந்து வீச்சில் துல்லியமாக செயல்பட்ட மதுரை சார்பில் அதிகபட்சமாக குர்ஜப்நீத் சிங் 3 விக்கெட்டுகளையும் கௌதம் மற்றும் முருகன் அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 99 என்ற மிகவும் சுலபமான இலக்கை துரத்திய மதுரையும் ஆரம்பத்திலேயே ஆதித்யா 8, ஹரி நிஷாந்த் 0 என தொடக்க வீரர்களின் விக்கெட்டுகளை ஒற்றை இலக்க ரன்களில் இழந்து தடுமாறியது.

இருப்பினும் அடுத்து வந்த ஜெகதீசன் கௌஷிக் சற்று நிதானமாக செயல்பட்டு 1 பவுண்டரி 2 சிக்சருடன் 21 (18) ரன்கள் குவித்து அழுத்தத்தை உடைத்து அவுட்டானார். அதை வீணடிக்காத வகையில் அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஸ்ரீ அபிஷேக் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 32* (28) ரன்களும் ஸ்வப்னில் சிங் அதிரடியாக 2 சிக்சருடன் 25* (16) ரன்களும் எடுத்து வெற்றி பெற வைத்தனர். அதன் காரணமாக போராடாமலேயே வெறும் 13 ஓவரில் 101/3 ரன்களை எடுத்த மதுரை 7 விக்கெட் வித்தியாசத்தில் சேலத்தை அதன் சொந்த ஊரில் சாய்த்து சிறப்பான வெற்றி பெற்றது.

- Advertisement -

மறுபுறம் பேட்டிங்கிலேயே வெற்றியை கோட்டை விட்டு சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்த சேலம் சார்பில் அதிகபட்சமாக சன்னி சந்து, கணேஷ் மூர்த்தி மற்றும் ஆகாஷ் சும்ரா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்த வெற்றிக்கு 4 ஓவரில் வெறும் 15 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்திய குர்ஜப்நீத் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

மேலும் இத்தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து ஆரம்பத்திலேயே பின்தங்கிய மதுரை ஒரு வழியாக இந்த 3வது போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 2 புள்ளிகளுடன் 5வது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் ஏற்கனவே ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்து தடுமாறி வந்த சேலம் மொத்தமாக பங்கேற்ற 4 போட்டிகளில் 3வது தோல்வியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 6வது இடத்திற்கு சரிந்தது.

இதையும் படிங்க:50 ஓவர் உலககோப்பையையும் தவறவிட இருக்கும் கே.எல் ராகுல். ஏன் தெரியுமா? – வெளியான முக்கிய தகவல்

இதை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையான இன்று 2 போட்டிகள் நடைபெறுகிறது. அதில் மதியம் 3.15 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி நடப்பு சான்ஸ் கோவை கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மேலும் 7.15 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் திருச்சி ஆகிய அணிகள் மோதுகின்றன.

Advertisement