என்னையா கழற்றி விடுறீங்க, உள்ளூர் தொடரில் சம்பவம் செய்து தேர்வுக்குழுவுக்கு இளம் வீரர் பதிலடி – குவியும் ஆதரவு

Shaw
- Advertisement -

இந்தியாவின் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான சயீத் முஷ்டாக் அலி கோப்பை 2022 தொடர் கடந்த அக்டோபர் 11ஆம் தேதியன்று துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் அக்டோபர் 14ஆம் தேதியன்று நடைபெற்ற 40வது லீக் போட்டியில் மும்பை மற்றும் அசாம் ஆகிய அணிகள் மோதின. சௌராஷ்ட்ராவில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற அசாம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய மும்பைக்கு தொடக்க வீரர் அமாம் கான் 15 (7) ரன்களில் ஆரம்பத்திலேயே அவுட்டானார். ஆனால் மறுபுறம் சக்கைபோடு போட்ட மற்றொரு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் பிரிதிவி ஷா அடுத்ததாக களமிறங்கிய இளம் வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் உடன் இணைந்து அசாம் பவுலர்களை பந்தாடினார்.

4வது ஓவரில் சேர்ந்த இவர்கள் 14வது ஓவர் வரை நங்கூரமாகவும் அதிரடியாகவும் 2வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்து தங்களது அணியை வலுப்படுத்திய போது 5 பவுண்டரி 1 சிக்சருடன் ஜெய்ஸ்வால் 42 (30) ரன்களில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் அவுட்டாகாமல் அடம் பிடித்த கேப்டன் பிரிதிவி ஷா தனக்கே உரித்தான பாணியில் அதிரடி சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கி சதமடித்தார். ஓப்பனிங்கில் களமிறங்கி 18 ஓவர்கள் வரை அட்டகாசமாக செயல்பட்ட அவர் 13 பவுண்டரி 9 மெகா சிக்ஸர்களுடன 134 ரன்களை 219.67 என்ற அபாரமான ஸ்டிரைக் ரேட்டில் விளாசி கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ராகுலுக்கு பதில்:
இறுதியில் ஷிவம் துபே 17* (7) ரன்கள் எடுத்ததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை 230/3 ரன்கள் குவித்தது. அதைத் தொடர்ந்து 231 என்ற கடினமான இலக்கை துரத்திய அசாம் பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே மும்பையின் தரமான பந்து வீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். குறிப்பாக ரியன் பராக் 28 (10) ஹசாரிகா 26 (22) ஆர் அஹமத் 39 (26) என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறியதுடன் விக்கெட்டுகளையும் இழந்ததால் 19.3 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அந்த அணி 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அந்த அளவுக்கு அற்புதமாக பந்து வீசிய மும்பை சார்பில் அதிகபட்சமாக துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதனால் 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற மும்பை எலைட் குரூப் ஏ பிரிவில் இதுவரை பங்கேற்ற 2 போட்டிகளிலும் 2 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. அதை விட இந்த அதிரடியான வெற்றிக்கு அட்டகாசமான சதமடித்து மிரட்டிய கேப்டன் பிரிதிவி ஷா சமூக வலைதளங்களில் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

- Advertisement -

கடந்த 2018 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக இந்தியாவுக்கு வென்று கொடுத்து சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் தன்னை அதிரடியான தொடக்க வீரராக அடையாளப்படுத்தினார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே சதமடித்து சாதனை படைத்த அவரை சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், பிரைன் லாரா ஆகியோர் கலந்த கலவை என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வெளிப்படையாக பாராட்டியிருந்தார். அந்தளவுக்கு திறமையான அவர் ஆரம்பத்தில் அசத்தினாலும் நாளடைவில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட தவறியதால் இந்திய அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

இருப்பினும் மனம் தளராத அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் இது போல சதங்களை விளாசி நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியும் சமீபத்தில் நடைபெற்று முடிந்த தென் ஆப்பிரிக்க ஒருநாள் மற்றும் டி20 தொடரில் தம்மை தேர்வு செய்யவில்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஆனாலும் தம்மை மீண்டும் தேர்வு செய்யும் வரை விடப்போவதில்லை என்று நம்பிக்கை தெரிவித்த அவர் தற்போது டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதத்தை விளாசி மீண்டும் ஒருமுறை தேர்வுக்குழுவினரின் கதவை வலுவாக தட்டியுள்ளார்.

இதையும் படிங்க: காயங்களுக்கு காரணமே ஐபிஎல் தான், இனியாவது இந்திய வீரர்கள் அதை பின்பற்றனும் – முன்னாள் பாக் வீரர் வேண்டுகோள்

இந்த தொடரில் இதுவரை 55*, 29, 134 என்ற நல்ல ரன்களை அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் விளாசி வரும் அவரை பாராட்டும் ரசிகர்கள் விரைவில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் ஸ்டேண்ட் பை லிஸ்டில் இருக்கும் ஷ்ரேயஸ் ஐயருக்கு பதிலாகவும் தடுமாறும் கேஎல் ராகுலுக்கு பதிலாகவும் தேர்வு செய்திருக்கலாம் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். இதனால் அறிமுக டி20 போட்டியுடன் கழற்றி விடப்பட்ட இவருக்கு இனியாவது இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைக்குமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement