காயங்களுக்கு காரணமே ஐபிஎல் தான், இனியாவது இந்திய வீரர்கள் அதை பின்பற்றனும் – முன்னாள் பாக் வீரர் வேண்டுகோள்

MI Jaspirt Bumrah
- Advertisement -

அனைவரிடமும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள ஐசிசி டி20 உலக கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் அக்டோபர் 16 முதல் ஆஸ்திரேலியாவில் துவங்குகிறது. சர்வதேச டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் வகையில் வரலாற்றில் 8வது முறையாக நடைபெறும் இத்தொடரில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிக்கட்டமாக தயாராகி வருகிறது. அவரது தலைமையில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் வென்று தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக இத்தொடரில் களமிறங்கும் இந்தியா கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை இந்திய ரசிகர்களிடம் குறைவாகவே காணப்படுகிறது.

Bumrah

- Advertisement -

ஏனெனில் பேட்டிங் துறை ஓரளவு வலுவாக இருந்தாலும் சமீப காலங்களாகவே டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கும் இந்தியாவின் பந்து வீச்சு துறை சுமாராகவே உள்ளது. இருப்பினும் அதை சரி செய்வார் என்று ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்த ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தீபக் சஹரும் 6 மாதத்தில் 2வது முறையாக மீண்டும் காயமடைந்து கடைசி நேரத்தில் வெளியேறியுள்ளார். அதுபோக முதன்மை சுழல் பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக கருதப்படும் ரவீந்திர ஜடேஜாவும் காயத்தால் வெளியேறியுள்ளார்.

காரணமே ஐபிஎல்:
இப்படி முக்கிய வீரர்கள் முக்கிய தொடரில் வெளியேறியுள்ளது இந்தியாவுக்கு பின்னடைவையும் ரசிகர்களுக்கு கடுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் உலக கோப்பையில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே சாதாரண நாட்களில் நடைபெறும் அயர்லாந்து, ஜிம்பாப்வே போன்ற முக்கியமற்ற தொடர்களில் இது போன்ற முக்கிய வீரர்களுக்கு பணிச்சுமையை நிர்வகிக்க ஓய்வளிக்கப்படுகிறது. ஆனால் அதையும் தாண்டி இப்படி கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறும் இவர்கள் ஐபிஎல் தொடரில் மட்டும் எவ்வித காரணத்துக்காகவும் எந்த ஒரு போட்டியையும் தவற விடுவதில்லை என்பதே ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது.

Deepak Chahar IND

இதில் ரவீந்திர ஜடேஜா மற்றும் தீபக் சஹர் ஆகியோர் ஐபிஎல் தொடரின் போது காயமடைந்து இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தினார்கள். இந்நிலையில் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்துடன் ஐபிஎல் போன்ற டி20 தொடர்களை புறக்கணித்து டி20 உலகக் கோப்பையில் முழு உடல் தகுதியுடன் விளையாட தயாராகியுள்ள ஆஸ்திரேலியாவின் மிட்சேல் ஸ்டார்க்கை ஜஸ்பிரித் பும்ரா போன்ற இந்திய வீரர்கள் பின்பற்ற வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

அல்லது குறைந்தபட்சம் சர்வதேச கிரிக்கெட்டில் எப்படி முக்கியமற்ற தொடர்களில் ஓய்வெடுக்கிறார்களோ அதே போல் ஐபிஎல் தொடரிலும் முக்கிய போட்டிகளில் மட்டும் விளையாடி விட்டு எஞ்சிய போட்டிகளில் ஓய்வெடுத்து நாட்டுக்காக விளையாடும் வேலைகளில் ஈடுபட வேண்டும் எனக்கூறும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “தீபக் சஹருக்கு நடந்தது துரதிர்ஷ்டவசமாகும். சமீபத்தில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அசத்திய அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலக கோப்பையில் விளையாடும் வீரராக உருவெடுத்தார். ஆனால் காயம் என்பது நம்முடைய கையில் இல்லை என்ற நிலைமை அவருக்கும் ஏற்பட்டுள்ளது”

Kaneria

“அதே சமயம் இப்போதெல்லாம் அடிக்கடி காயங்களை சந்திக்கும் அவர் அதில் தீர்வு காண்பதற்கு முயற்சிக்க வேண்டும். மறுபுறம் மிட்செல் ஸ்டார்க் போன்ற வீரர்களை பாருங்கள். அவர் உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்பதற்காகவே ஐபிஎல் தொடரை புறக்கணித்துவிட்டு ஃபிட்டாக உள்ளார். இதை தான் தேசத்துக்காக கடமையாற்றுவது என்பார்கள். ஆனால் இங்கு ஜஸ்பிரித் பும்ரா போன்ற பெரிய பவுலர் அணியுடன் இல்லை. அவர் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் பங்கேற்கவில்லை என்பதே பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது”

“தற்போது டி20 உலகக்கோப்பை போன்ற பெரிய தொடரிலும் அவரில்லை. எனவே ஐபிஎல் தொடரிலும் சரி சர்வதேச போட்டிகளிலும் சரி அவரை போன்ற முக்கிய வீரர்கள் முக்கியமற்ற போட்டிகளில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும். அவரை அந்த வழியை பின்பற்ற வைத்து உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களுக்கு தயாராக இந்திய அணி நிர்வாகம் தான் அறிவுறுத்த வேண்டும்” என்று கூறினார். ஆனால் ஐபிஎல் தொடரை பிசிசிஐ நடத்துவதால் முக்கிய இந்திய வீரர்கள் பணத்துக்காக ஐபிஎல் தொடரில் விளையாடுவதை தடுக்க யாருமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement