
இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டி ஜனவரி 29ஆம் தேதி கால் நகரில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா இலங்கையை புரட்டி எடுத்து 654/6 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
அந்த அணிக்கு துவக்க வீரர் உஸ்மான் கவாஜா இரட்டை சதத்தை அடித்து 232 ரன்கள் குவித்து அசத்தினார். அதன் வாயிலாக இலங்கை மண்ணில் இரட்டை சதத்தை அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் நிகழ்த்தினார். அது போக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வயதில் இரட்டை சதத்தை அடித்த வீரர் என்ற சச்சின் உலக சாதனையையும் அவர் முறியடித்தார்.
அவருடன் சேர்ந்து விளையாடிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 10000 ரன்கள் கடந்து 141, ஜோஸ் இங்லிஷ் தனது அறிமுக போட்டியிலேயே 102 ரன்கள் குவித்து அசத்தினார்கள். இலங்கைக்கு அதிகபட்சமாக பிரபத் ஜெயசூர்யா மற்றும் ஜெஃப்ரி வேண்டர்சே தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்ததாக களமிறங்கிய பெர்னாண்டோ 7, கருணரத்னே 7, மேத்தியூஸ் 7, கமிண்டு மெண்டிஸ் 15, கேப்டன் டீ சில்வா 22 ரன்களில் அவுட்டானார்கள்.
அதனால் ஆரம்பத்திலேயே சரிவை சந்தித்த இலங்கைக்கு தினேஷ் சண்டிமல் நிதானமாக 63*, குசால் மெண்டிஸ் 10* ரன்கள் எடுத்தார்கள். அப்போது மழை வந்ததால் 3வது நாள் ஆட்டம் முன்னதாகவே முடித்துக் கொள்ளப்பட்டது. தற்சமயத்தில் இலங்கை இன்னும் 518 ரன்கள் பின்னிலையில் இருப்பதால் இப்போட்டியில் அந்த அணியை மழை மட்டுமே தோல்வியிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னதாக இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் மிட்சேல் ஸ்டார்க் இதுவரை 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் அவர் மொத்தம் 701 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் ஜாம்பவான் டேல் ஸ்டைனை முந்திய அவர் 18வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
இதையும் படிங்க: 4வது இங்கிலாந்து டி20யில் நீக்கப்பட்ட ஷமி, துபே இஸ் பேக்.. 3 மாற்றங்களுடன் இந்திய அணி இதோ
அந்த சாதனையை ஜனவரி 30ஆம் தேதி தம்முடைய பிறந்தநாளில் அவர் படைத்தார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள் எடுத்த 3வது இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்ற அபார சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் வாசிம் அக்ரம் (916), சமிந்தா வாஸ் (761) ஆகியோர் மட்டுமே 700க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள்.