இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் நியூசிலாந்து வென்றது. அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரிலும் முதல் 2 போட்டிகளில் நியூசிலாந்து வென்றது. அந்த நிலையில் சம்பிரதாய கடைசி போட்டி ஜனவரி 11ஆம் தேதி ஆக்லாந்து நகரில் நடைபெற்றது.
அதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கைக்கு அவிஷ்கா பெர்னாண்டோ 17 ரன்களில் அவுட்டானார். ஆனால் மற்றொரு துவக்க வீரர் பதும் நிசாங்கா அதிரடியாக விளையாடி அரை சதத்தை விளாசி 66 (42) ரன்கள் குவித்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய குசால் மெண்டிஸ் தம்முடைய பங்கிற்கு அரை சதத்தை அடித்து 54 ரன்கள் எடுத்தார்.
இலங்கை அசத்தல்:
மிடில் ஆர்டரில் கமிண்டு மெண்டிஸ் 46, ஜனித் லியனகே 53 ரன்கள் எடுத்து அசத்தார்கள். இறுதியில் விக்கிரமசிங்கே 19, ஹசரங்கா 15, தீக்சனா 11* ரன்கள் எடுத்த உதவியுடன் 50 ஓவரில் இலங்கை 290-5 ரன்கள் குவித்தது. நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி 4, கேப்டன் மிட்சேல் சான்ட்னர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
அடுத்ததாக 291 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு வில் எங் 0, ரச்சின் ரவீந்தரா 1, டேரில் மிட்சேல் 2, கிளன் பிலிப்ஸ் 0, டாம் லாதம் 0 ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பெரிய பின்னடைவை கொடுத்தார்கள். அதனால் 6.5 ஓவரில் 21-5 என ஆரம்பத்திலேயே சரிந்த நியூசிலாந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. அப்போது மார்க் சேப்மன் நிதானமாக விளையாடி வெற்றிக்கு போராடினார்.
ஆறுதல் வெற்றி:
ஆனால் எதிர்ப்புறம் மைக்கேல் பிரேஸ்வெல் 13, கேப்டன் சான்ட்னர் 2, நாதன் ஸ்மித் 17 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள். இறுதியில் சேப்மேன் 81 (81) ரன்கள் எடுத்தும் 29.4 ஓவரில் 150 ரன்களுக்கு நியூசிலாந்தை சுருட்டிய இலங்கை 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக அசிதா பெர்னாண்டோ, மஹீஷ் தீக்சனா, ஈசான் மலிங்கா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.
இதையும் படிங்க: பும்ரா மாதிரி ஒரு வீரர் எந்த அணிக்கு கிடைச்சாலும் அவங்க லக்கி தான் – பாராட்டி தள்ளிய இங்கிலாந்து வீரர்
அந்த வகையில் இலங்கை அணி ஒயிட் வாஷ் தோல்வியை சந்தித்து ஆறுதல் வெற்றியுடன் இந்த சுற்றுப்பயணத்தை முடித்தது. மறுபுறம் 2 – 1 (3) என்ற கணக்கில் இந்த தொடரையும் சொந்த மண்ணில் நியூசிலாந்து வென்றது. அசிதா பெர்னாண்டோ ஆட்டநாயகன் விருதையும் மார்க் ஹென்றி தொடர்நாயகன் விருதையும் வென்றார்கள்.