IND vs SL : சரிந்த இந்தியாவை சிங்கமாய் காப்பாற்ற போராடிய அக்சர் படேல் – சூரியகுமார், தோல்விக்கான காரணங்கள் இதோ

IND vs SL Axar PAtel
- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் இந்தியா முதல் போட்டியில் 2 ரன்கள் வித்யாசத்தில் திரில் வெற்றி பெற்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. குறிப்பாக 2024 டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்கள் களமிறங்கியுள்ள இத்தொடரில் ஜனவரி 5ஆம் தேதியன்று இரவு 7 மணிக்கு புனே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய இலங்கைக்கு பவர் பிளே ஓவர்களில் சுமாராக செயல்பட்ட இந்திய பவுலர்களை அடித்து நொறுக்கி 80 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டலான தொடக்கம் கொடுத்த குசால் மெண்டிஸ் 3 பவுண்டரி 4 சிக்ஸருடன் அரை சதமடித்து 52 (31) ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது வந்த ராஜாபக்சா 2 (3) ரன்னில் உம்ரான் மாலிக் வேகத்தில் ஆட்டமிழந்த நிலையில் அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் நின்ற தொடக்க வீரர் நிசாங்காவும் 33 (35) ரன்களில் அவுட்டானார். அடுத்த சில ஓவர்களில் டீ சில்வா 3 ரன்னில் ஆட்டமிழந்தாலும் மறுபுறம் 4 சிக்சர்களை தெறிக்க விட்ட அசலங்காவை 37 (19) ரன்களில் காலி செய்த உம்ரான் மாலிக் அடுத்து வந்த ஹஸரங்காவை டக் அவுட்டாக்கினார்.

- Advertisement -

அதனால் 138/6 என தடுமாறி இலங்கையை அடுத்து களமிறங்கிய கேப்டன் டசுன் சனாக்கா டெத் ஓவர்களில் சுமாராக பந்து வீசிய இந்திய பவுலர்களை அடித்து நொறுக்கி 2 பவுண்டரி 6 சிக்சருடன் 56* (22) ரன்களை தெறிக்க விட்டு அபார பினிஷிங் கொடுத்த 20 ஓவர்களில் இலங்கை 206/6 ரன்கள் சேர்த்தது. பந்து வீச்சில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக உம்ரான் மாலிக் 3 விக்கெட்களையும் அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

அதை தொடர்ந்து 207 என்ற கடினமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு இஷான் கிசான் 2 (5) சுப்மன் கில் 5 (3) என தொடக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே ரஜிதாவிடம் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அந்த சமயத்தில் அறிமுகமாக களமிறங்கிய ராகுல் திரிபாதியும் 5 (5) ரன்னில் அவுட்டாகி சென்றதால் 21/3 என சரிந்த இந்தியா மோசமான தொடக்கத்தை பெற்றது. அப்போது காப்பாற்றுவார் என்று கருதப்பட்ட கேப்டன் பாண்டியாவும் அதிரடியாக விளையாடும் முயன்று 12 (12) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்த நிலையில் நங்கூரத்தை போடும் என்ற தீபக் ஹூடாவும் 9 (12) ரன்னில் அவுட்டாகி மேலும் பின்னடைவை ஏற்படுத்தினார்.

- Advertisement -

அப்படி இலங்கையின் அதிரடியான பந்து வீச்சில் 9.1 ஓவரில் 57/5 என சரிந்து ஆரம்பத்திலேயே தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியானது. அப்போது மற்றொருபுறம் இருந்த சூரியகுமார் யாதவ் தடுமாறிய நிலையில் அடுத்து களமிறங்கிய அக்சர் பட்டேல் ஆரம்பம் முதலே அதிரடியாக ரன்களை குவித்து இந்தியாவை காப்பாற்ற போராடினார். குறிப்பாக இலங்கையின் நம்பர் ஒன் ஸ்பின்னரான வணிந்து ஹசரங்கா வீசிய 15வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை தெறிக்க விட்ட அவர் 20 பந்துகளில் அரை சதம் கடந்தார்.

அவருடன் மறுபுறம் தமது பங்கிற்கு அதிரடி காட்டிய சூரியகுமார் 6வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கான நம்பிக்கையை ஏற்படுத்திய போது துரதிஷ்டவசமாக 3 பவுண்டரி 3 சிக்ஸருடன் 51 (33) ரன்களில் அவுட்டானார். அப்போது கடைசி 4 ஓவரில் இந்தியாவுக்கு 58 ரன்கள் தேவைப்பட்ட போது களமிறங்கிய சிவம் மாவி மதுசங்கா வீசிய 18வது ஓவரின் கடைசி 3 பந்தில் 6, 4, 6 என அடுத்தடுத்து பவுண்டரிகளை பறக்க விட்டு மிரட்டினார்.

அதனால் வெற்றியை நெருங்கிய இந்தியாவுக்கு கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்ட போது வனிந்து ஹசரங்காவிடம் சிவம் மாவி முதல் பந்தில் சிங்கிள் எடுக்க அடுத்த பந்தில் 2 ரன்கள் எடுத்த அக்சர் பட்டேல் 3வது பந்தில் 3 பவுண்டரி 6 சிக்ஸருடன் போராடி 65 (35) ரன்களில் ஆட்டமிழந்தார். அதனால் வெற்றியும் பறிபோனது போல மறுபுறம் வெற்றிக்கு போராடிய சிவ மாவியும் 26 (15) ரன்களில் அவுட்டானதால் 20 ஓவரில் 190/8 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா போராடி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இப்போட்டியில் பந்து வீச்சில் டெத் ஓவர்களில் சொதப்பிய இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மத்தியில் அரஷ்தீப் சிங் 5 நோ-பால்களை வீசி ரன்களை வாரி வழங்கியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் பேட்டிங்கில் பவர் பிளே ஓவர்களில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன்களை குவிக்க தவறியதும் கடைசியில் சிவம் மாவி போன்றவர்களின் போராட்டத்தை வீணடித்தது. அதை பயன்படுத்திய இலங்கை 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்துள்ளது.

Advertisement