இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேசம் அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அதிலிருந்து 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையும் துவங்கியது. அத்தொடரில் ஜூன் 17ஆம் தேதி கால்லே நகரில் துவங்கிய முதல் போட்டி டிராவில் முடிந்தது. அந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் 495 ரன்கள் அடித்த வங்கதேசம் பின்னர் இலங்கையை 485 ரன்களுக்கு சுருட்டியது.
அடுத்ததாக விளையாடிய வங்கதேசம் 285/6 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. அடுத்து விளையாடிய இலங்கை 72/4 ரன்கள் எடுத்த போது போட்டி டிராவல் முடிந்தது. அந்த வகையில் முதல் போட்டியில் இலங்கைக்கு அதனுடைய சொந்த மண்ணில் சவாலைக் கொடுத்த வங்கதேசம் 2வது போட்டியிலும் வீராப்பைக் காட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2வது போட்டி ஜூன் 25ஆம் தேதி கொழும்புவில் துவங்கியது.
இலங்கை அசத்தல்:
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் இம்முறை சுதாரித்து பவுலிங் செய்த இலங்கை அணியினர் வங்கதேசத்தை 247 ரன்களுக்கு சுருட்டி வீசினார்கள். வங்கதேசத்திற்கு அதிகபட்சமாக சாத்மன் இஸ்லாம் 46, முஸ்பிக்கர் ரஹீம் 35, லிட்டன் தாஸ் 34, மெகதி ஹசன் 31, டைஜூல் இஸ்லாம் 33 ரன்களை எடுத்தார்கள்.
இலங்கைக்கு அதிகபட்சமாக அசிதா பெர்னாண்டோ, சோனல் தினுசா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தார்கள். அதற்கடுத்ததாக விளையாடிய இலங்கை அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 458 ரன்கள் குவித்து 211 ரன்களை முன்னிலையாகப் பெற்று அசத்தியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக பதும் நிசாங்கா சதத்தை அடித்து 158 ரன்கள் குவித்து அமர்க்களப் படுத்தினார்.
9வது இன்னிங்ஸ் வெற்றி:
அவருடன் தினேஷ் சண்டிமல் 93, குசால் மெண்டிஸ் 84, லகிரு உதாரா 40 ரன்களை அடித்தார்கள். வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக டைஜூல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக 211 ரன்கள் பின்தங்கிய நிலமையில் விளையாடிய வங்கதேசத்தை மீண்டும் அபாரமாக பவுலிங் செய்த இலங்கை வெறும் 133 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி ஊதித் தள்ளியது.
இதையும் படிங்க: 159 ரன்ஸ்.. 2 நாள் மிரட்டிய வெ.இ அணியை அரை நாளில் முடித்த ஆஸி.. 2003க்குப்பின் தொடர்ந்து 4வது சாதனை வெற்றி
அதிகபட்சமாக ரஹீம் 26 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கைக்கு அதிகபட்சமாக பிரபத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளை எடுத்தார். அதனால் வெறும் 3 நாட்களில் இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இலங்கை 1 – 0 (2) என்ற கணக்கில் இத்தொடரை வென்றது. இதையும் சேர்த்து 9வது முறையாக வங்கதேசத்துக்கு எதிராக இலங்கை இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. அத்துடன் 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் (0) இந்தியா (0), வங்கதேசம் (16.67) ஆகிய அணிகளை முந்திய இலங்கை (66.67%) 3வது இடத்திற்கு முன்னேறியது.



