ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை தங்களுடைய சொந்த மண்ணில் வென்றது. இதை தொடர்ந்து 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகின்றன. பிப்ரவரி 17ஆம் தேதி துவங்கிய அத்தொடரின் முதல் போட்டி தம்புலா நகரில் இரவு 7 மணிக்கு நடைபெற்றது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இலங்கைக்கு பதும் நிசாங்கா 6, குஷால் மெண்டிஸ் 10, தனஜெயா டீ சில்வா 24, சமரவிக்ரமா 25, அசலங்கா 3 என முக்கிய வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனாலும் லோயர் மிடில் ஆடரில் முரட்டுத்தனமாக அடித்த கேப்டன் வணிந்து ஹஸ்ரங்கா 7 பவுண்டரி 3 சிக்சருடன் 67 (32) ரன்கள் விளாசினார்.
கைமாறிய வெற்றி:
இருப்பினும் அடுத்து வந்த வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்ததால் 19 ஓவரில் இலங்கையை 160 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக பரூக்கி 3, நவீன்-உல்-ஹக் 2, அசமதுல்லா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள். அதைத்தொடர்ந்து 161 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தானுக்கு கேப்டன் இப்ராஹிம் ஜாட்ரான் அதிரடியாக விளையாடிய நிலையில் எதிர்புறம் ரகமனுல்லா குர்பாஸ் 67, குல்பதின் நைப் 16, ஓமர்சாய் 2, முகமது நபி 9, நஜிபுல்லா ஜாட்ரான் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
அதனால் 86/5 என திணறிய ஆப்கானிஸ்தானுக்கு மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இப்ராஹிம் ஜாட்ரான் அரை சதமடித்து வெற்றிக்கு போராடினார். ஆனால் அவருக்கு கை கொடுக்க முயற்சித்த கரீம் ஜானத் 20, காய்ஸ் அஹமத் 7, நூர் அகமது 9 நவீன்-உல்-ஹல் 1 ரன்களில் அவுட்டாகி தொடர்ந்து பின்னடைவை ஏற்படுத்தினர்.
இருப்பினும் எதிர்புறம் தொடர்ந்து இப்ராஹிம் போராடியதால் வெற்றியை நெருங்கிய ஆப்கானிஸ்தானுக்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டாலும் 1 விக்கெட் மட்டுமே கைவசம் இருந்தது. பினுரா பெர்னாண்டோ வீசிய அந்த ஓவரில் எதிர்ப்புறமிருந்த ஃபரூக்கிக்கு பேட்டிங் செய்ய தெரியாது என்பதால் அனைத்து 6 பந்துகளையும் தாமே எதிர்கொள்ளும் பரிதாப முடிவை கேப்டன் இப்ராஹீம் எடுத்தார். ஆனால் அதில் முதல் 4 பந்துகளில் கடினமாக போராடியும் ரன்கள் எடுக்க தவறிய அவர் 5வது பந்தில் 2 ரன்களும் கடைசி பந்தில் பவுண்டரியும் அடித்தார்.
இதையும் படிங்க: அதை கவனிச்சீங்களா.. இந்திய அணி பயப்படுறாங்கன்னு சொல்ல அது ஒன்னே போதும்.. பென் டக்கெட் பேட்டி
அதனால் 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தானை 156/9 ரன்களுக்கு கட்டுப்படுத்திய இலங்கை 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக பேபி மலிங்கா என்றழைக்கப்படும் மதிஷா பதிரானா 4 ஓவரில் 24 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்தார். மறுபுறம் இப்ராஹிம் ஜாட்ரான் 67* (55) ரன்கள் எடுத்தும் எதிர்ப்புறம் எந்த பேட்ஸ்மேன்களும் பெரியளவில் கை கொடுக்காததால் ஆப்கானிஸ்தான் போராடி நூலிழையில் வெற்றியை தவற விட்டது.