இங்கிலாந்துக்கு எதிராக ராஜ்கோட் நகரில் நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாள் முடிவில் இந்தியா 322 ரன்கள் முன்னிலை பெற்று வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளது. பிப்ரவரி 15ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 445 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 132, ரவீந்திர ஜடேஜா 112 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக மார்க் வுட் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து பென் டக்கெட் அதிரடி சரவெடியாக விளையாடி சதமடித்து 153 (151) ரன்கள் எடுத்ததால் ஒரு கட்டத்தில் 224/2 என்ற வலுவான நிலையில் இருந்தது. ஆனால் அதன் பின் அஸ்வின் இல்லாமலேயே அபாரமாக பந்து வீசிய இந்தியா அடுத்த 95 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை எடுத்து இங்கிலாந்தை 319 ரன்களுக்கு சுருட்டியது.
தைரியம் இல்ல:
இந்திய அணிக்கு அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 126 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியா மூன்றாவது நாள் முடிவில் 196/2 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா 19, ரஜத் படிதார் 0 ரன்களில் அவுட்டானாலும் ஜெய்ஸ்வால் அபாரமான சதமடித்த 104* ரன்கள் குவித்தார்.
அவருடன் சேர்ந்து விளையாடிய சுப்மன் கில் களத்தில் அரை சதமடித்து 65*, குல்தீப் யாதவ் 3* ரன்களுடன் உள்ளனர். இந்நிலையில் 322 ரன்கள் முன்னிலையாக கொண்டிருந்தும் மூன்றாவது நாள் மாலையில் ரஜத் படிடார் அவுட்டான போது முழு நேர பேட்ஸ்மேன் சர்பராஸ் கானை அனுப்பாமல் நைட் வாட்ச்மேன் குல்தீப் யாதவை அனுப்பியதிலேயே இந்தியா தங்களை பார்த்து சற்று பயப்படுவதாக பென் டக்கெட் கூறியுள்ளார்.
எனவே தொடர்ந்து தங்களுடைய பஸ்பால் ஆட்டத்தை இப்போட்டியில் வெளிப்படுத்துவோம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “300க்கும் மேற்பட்ட ரன்களை முன்னிலையாக கொண்டிருந்தும் இந்தியா நைட் வாட்ச்மேனை அனுப்பியதே அவர்கள் எங்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. எனவே நாங்கள் விளையாடும் வழியில் தொடர்ந்து விளையாட உள்ளோம்”
இதையும் படிங்க: இதான் கரெக்ட்.. அவங்கள இப்படி தான் நடத்தனும்.. தனது ஸ்டைலில் சதமடித்த ஜெய்ஸ்வாலுக்கு சேவாக் பாராட்டு
“குறிப்பாக இந்த பிட்ச்சில் நாளை 2 – 3 விக்கெட்டுகளை நாங்கள் வேகமாக எடுக்கும் பட்சத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அதே சமயம் இன்று மாலை இந்தியா விளையாடிய விதத்திற்கு நீங்கள் பாராட்டுகளையும் தெரிவிக்க வேண்டும். நேற்று நாங்கள் சூப்பராக பேட்டிங் செய்ததாக நினைக்கிறேன். ஆனால் இன்று காலை எதையும் எளிதாக எங்களுக்கு கொடுக்காமல் அவர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். நாங்கள் தொடர்ந்து அவர்களை அட்டாக் செய்தோம். இருப்பினும் எதுவும் சாதகமாக கிடைக்கவில்லை” என்று கூறினார்.