
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் அமீரகத்தை தோற்கடித்தது. அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடும் போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் துவங்க உள்ளது. முன்னதாக இந்தத் தொடருக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டதால் நிச்சயம் பிளேயிங் லெவனில் விளையாடுவார் என்று நம்பப்பட்டது.
அதனால் சஞ்சு சாம்சன் பெஞ்சில் அமர வைக்கப்படுவார் என்பதே பலருடைய எதிர்பார்ப்பாக இருந்தது. ஏனெனில் நீண்ட காலம் மிடில் ஆர்டரில் களமிறங்கிய வந்த அவர் சிறப்பாக விளையாடவில்லை. இருப்பினும் கௌதம் கம்பீர் பயிற்சியாளராக வந்ததும் அவருக்கு ஓப்பனிங்கில் விளையாடும் வாய்ப்பைக் கொடுத்தார். அந்த வாய்ப்பில் ஒரு வழியாக அபாரமாக விளையாடிய சாம்சன் 3 சதங்கள் அடித்து நிலையான இடத்தைப் பிடித்தார்.
இருப்பினும் தற்போது துணை கேப்டனாக வந்துள்ள சுப்மன் கில் ஓப்பனிங் இடத்தை பெற்றுள்ளார். அதனால் பெஞ்சில் அமர வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சாம்சனுக்கு மிடில் ஆர்டரில் விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பில் மீண்டும் அவர் தடுமாற்றமாக விளையாடும் பட்சத்தில் அணியிலிருந்து கழற்றி விட வாய்ப்புள்ளது என்றே சொல்லலாம்.
ஏனெனில் தம்முடைய கேரியரில் எப்போதுமே அவர் மிடில் ஆர்டரில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடியதில்லை. சொல்லப்போனால் மிடில் ஆர்டரில் மீண்டும் தடுமாறினால் சாம்சனை கழற்றி விட்டு ஸ்ரேயாஸ் ஐயரை அணிக்குள் கொண்டு வர கௌதம் கம்பீர் முடிவெடுத்துள்ளதாக முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சஞ்சு சாம்சன் மீண்டும் மிடில் ஆர்டரில் சொதப்புவார் என்று அர்த்தமில்லை என பேட்டிங் பயிற்சியாளர் சித்தான்சு கோட்டக் தெரிவித்துள்ளார். அதே போல சாம்சனுக்கு இனிமேல் 3வது இடத்தில் விளையாட வாய்ப்பு கிடைக்காது என்று அர்த்தமில்லை எனவும் கோட்டக் தெரிவித்துள்ளார். அடுத்து வரும் போட்டிகளில் சூழ்நிலைக்குத் தகுந்தார் சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
இதையும் படிங்க: பும்ராவை விட சிறந்த பவுலரான அவரை சாம்பியன்ஸ் ட்ராபி மாதிரி பெஞ்சில் உட்கார வைக்காதிங்க.. ஆகாஷ் சோப்ரா
“சஞ்சு சாம்சன் 5 அல்லது 6வது இடங்களில் அதிகமாக பேட்டிங் செய்ததில்லை. அதற்காக அவரால் எந்த இடத்திலும் பேட்டிங் செய்ய முடியாது என்று அர்த்தமில்லை. எங்கள் அணியில் இருக்கும் அனைவருக்கும் தங்களுடைய வேலையைப் பற்றி தெரியும். கடந்தப் போட்டியில் அவர் 3வது இடத்தில் பேட்டிங் செய்யவில்லை. அதற்காக அடுத்தப் போட்டியிலும் அதுவே நடக்கும் என்று அர்த்தமில்லை” எனக் கூறினார்.