ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் 2008 முதல் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது. கடந்த 18 வருடங்களாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் பல பரிணாம வளர்ச்சியைக் கண்டு வருகிறது. அந்த வகையில் ஐபிஎல் தொடரில் ரசிகர்களை ஈர்ப்பதற்காகவும் புதுமையை உருவாக்குவதற்காகவும் சில வருடங்களுக்கு முன் இம்பேக்ட் பிளேயர் எனும் விதிமுறையை பிசிசிஐ அறிமுகப்படுத்தியது.
அந்த விதிமுறையால் குறிப்பிட்ட ஓவர்களுக்கு பின் ஒவ்வொரு அணியும் ஒரு எக்ஸ்ட்ரா வீரரை விளையாட வைக்க முடியும். அதனால் ஒவ்வொரு அணியும் ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் மற்றும் பவுலரை விளையாட வைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. அந்த விதிமுறை கூடுதலாக ரன்கள் அடிக்கவும் பந்து வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தவும் உதவி செய்வதால் எம்எஸ் தோனி போன்ற பலரும் வரவேற்றனர்.
இம்பேக்ட் பிளேயர் விதிமுறை:
இருப்பினும் அந்த விதிமுறைக்கு நான் ரசிகன் அல்ல என்று விராட் கோலி அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதே போல இம்பேக்ட் வீரர் விதிமுறையால் வாஷிங்டன் சுந்தர், சிவம் துபே போன்ற ஆல்ரவுண்டர்கள் உருவாவதில் பின்னடைவு ஏற்படுவதாக ரோஹித் சர்மா விமர்சித்திருந்தார். அது மட்டுமின்றி டேவிட் மில்லர் போன்ற சில வெளிநாட்டு வீரர்களும் இம்பேக்ட் வீரர் விதிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பயன்படுத்தப்பட்டு வரும் இம்பேக்ட் வீரர் விதிமுறைக்கு தாமும் ரசிகன் அல்ல என்று பிரபல முன்னாள் ஐசிசி அம்பயர் சைமன் ஃடவுபல் தெரிவித்துள்ளார். இது பற்றி க்ரிக்பஸ் அவர் பேசியது பின்வருமாறு. “அனைத்து மாற்றங்களும் நல்லது கிடையாது. சில நேரங்களில் மாற்றங்கள் அடிப்படைகளை உடைக்கும்”
எனக்கும் பிடிக்கல:
“விளம்பர தந்திரத்திற்காக நாம் விஷயங்களை மாற்றுகிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் அங்கே நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் ரசிகர்கள் தங்கள் வீட்டில் நாற்காலிகளில் அமர்ந்து போட்டிகளைத் தொலைக்காட்சியில் பார்க்கிறார்கள். அங்கே நீங்கள் உருவாக்கும் விதிமுறை அவர்களுக்கு புரியவில்லை என்றால் அதைப் பின்பற்றுவது கடினம்”
இதையும் படிங்க: ஐபிஎல் 2026: முஸ்தபிசூர் ரஹ்மானைஅணியிலிருந்து தூக்குங்க.. கொல்கத்தாவுக்கு கெடு விதித்த பிசிசிஐ
“என்னைப் பொறுத்த வரை விளையாட்டு நிலைமைகள் தான் விளையாட்டுக்கு மதிப்பைச் சேர்க்க வேண்டும். உங்களுடைய கேப்டன்கள் மற்றும் வீரர்கள் தங்களை வெளிப்படுத்த விரும்பும் சூழ்நிலைகளை நீங்கள் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். ஸ்விட்ச் ஹிட்டை (ஷாட்) சுற்றி நாம் செய்த சில மாற்றங்கள் சிறப்பானது. பவுண்டரி எல்லை மற்றும் விளையாட்டுச் சூழ்நிலை ஆகியவற்றில் நாம் செய்த சில மாற்றங்களும் சிறப்பானது. அதனால் நாம் அதிக விளையாட்டுத் திறன், அதிக ஸ்கோர் விகிதங்களை பார்க்கிறோம். ஆனால் கிரிக்கெட்டில் எந்த விதிமுறைகளாக இருந்தாலும் அது பேட்டிங், பவுலிங் ஆகியவற்றுக்கு சமமாக இருப்பது முக்கியம்” என்று கூறினார்.



