
நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் இந்தியா தோற்றது. அதனால் வரலாற்றில் முதல் முறையாக நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்தியா தோல்வியைச் சந்தித்தது. அந்த தோல்விக்கு பெரும்பாலான இந்திய வீரர்கள் சுமாராக விளையாடியது முக்கிய காரணமாக அமைந்தது.
குறிப்பாக நம்பிக்கை நட்சத்திரம் ரோஹித் சர்மா 11, 24, 26 ரன்கள் மட்டுமே எடுத்தது பின்னடைவாக அமைந்தது. 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை கேப்டனாக வென்ற அவர் 2027 உலகக் கோப்பையில் இந்தியாவை தலைமைத் தாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முன் வயதைக் காரணமாக வைத்து அவரை கழற்றி விட தேர்வுக்குழு முயற்சித்து வருகின்றது.
அதனுடைய முதல் படியாகவே ரோஹித்தை கேப்டனாக கழற்றி விட்ட தேர்வுக்குழு கில் தலைமையில் புதிய அணியை உருவாக்கத் துவங்கியுள்ளது. இருப்பினும் அதற்கு அசராமல் கடந்த ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க தொடரில் அசத்திய ரோஹித் இத்தொடரில் சொதப்பலாக விளையாடியுள்ளார். அதனால் ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை கோட்டை விட்ட அவர் சரிவை சந்தித்துள்ளார்.
அதனால் ஏற்கனவே கழற்றி விட காத்திருக்கும் தேர்வுக்குழுவுக்கு இடமளிக்கும் வகையில் ரோஹித் சர்மா நியூஸிலாந்து தொடரில் சுமாராக விளையாடியது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. இந்நிலையில் 2027 உலகக்கோப்பையில் விளையாட ஆசைப்படும் ரோஹித் அதற்கான பசியைக் கொண்டிருக்கிறாரா? என்பது கேள்விக்குறியாக இருப்பதாக முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டௌல் கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“டி20 உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை உட்பட ரோஹித் சர்மா எப்போதும் சேசிங் செய்வதற்கு ஒரு இலக்கைக் கொண்டிருப்பார் என்று நான் கருதுகிறேன். இருப்பினும் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 2027 உலகக்கோப்பை வெகு தொலைவில் இருப்பதாக கருதுகிறேன். அதில் விளையாடுவதற்கான உண்மையான பசி அவரிடம் இருக்கிறதா? ஏனெனில் ஒவ்வொரு வருடமும் வித்தியாசமானது அல்லவா”
இதையும் படிங்க: கேப்டனாக நீங்க அங்க போய் நின்னுகிட்டா எப்படி ஜெய்க்க முடியும்? கில்லுக்கு இயன் ஸ்மித் அட்வைஸ்
“பொதுவாக உலகக் கோப்பைக்கான தேசிய அணியை கட்டமைக்கும் போது நீங்கள் யார் என்பது முக்கியமல்ல. ஒவ்வொரு வருடமும் நடைபெறும் ஒரு ஐசிசி தொடருக்காக நீங்கள் வெவ்வேறு அணியை உருவாக்குகிறீர்கள். அடுத்த 2 வாரங்கள் கழித்து டி20 உலகக்கோப்பை நடைபெற உள்ளது. அதனால் அடுத்த 3 – 4 மாதங்களில் மிகவும் குறைவான ஒருநாள் போட்டிகள் மட்டுமே நடைபெறும். மறுபுறம் நீங்களோ ஒரு ஃபார்மட்டில் மட்டுமே விளையாடுகிறீர்கள். அதனால் உங்களுக்கு சர்வதேச அளவில் விளையாட அதிக வாய்ப்புகள் கிடைக்காது. அடுத்ததாக ரோஹித் வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் இந்தியாவுக்காக விளையாடுவார். அதுவே மிகப்பெரிய இடைவெளியாகும்” என்று கூறினார்.