ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் கௌகாத்தியில் நேற்று நடைபெற்ற 6வது லீக் போட்டியில் ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் 152 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 29, துருவ் ஜுரேல் 33 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக விளையாடிய கொல்கத்தா அணியை டீ காக் 97* ரன்கள் விளாசி 17.3 ஓவரில் வெற்றி பெற உதவினர்.
அதனால் கொல்கத்தா இந்த வருடம் தங்களது முதல் வெற்றியை பெற்றது. மறுபுறம் ரியான் பராக் தலைமையில் இந்த வருடம் ராஜஸ்தான் இரண்டாவது தோல்வியை சந்தித்தது. முன்னதாக இந்தப் போட்டியில் ராஜஸ்தான் தோல்வியை சந்திக்க 170 ரன்கள் அடிக்காதது காரணம் என்று ரியான் பராக் வருத்தம் தெரிவித்தார்.
11 கோடி ஹெட்மயர்:
அது போன்ற சூழ்நிலையில் அதிரடியாக விளையாடக்கூடிய சிம்ரோன் ஹெட்மயரை 8வது இடத்தில் களமிறக்கியதே காரணம் என்று முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டௌல் விமர்சித்துள்ளார். குறிப்பாக ஹசரங்கா போன்ற பகுதி நேர பேட்ஸ்மேனுக்கு கீழே ஹெட்மயரை கேப்டன் ரியான் பராக் விளையாட வைத்தது தவறு என்றும் அவர் விமர்சித்துள்ளார். இது பற்றி டௌல் பேசியது பின்வருமாறு.
“ஹெட்மேயரை ஏன் நீங்கள் பாதுகாக்கிறீர்கள்? அவரை எவ்வளவு தொகைக்கு நீங்கள் வாங்கினீர்கள்? 11 கோடி. ஆனால் அவரை நீங்கள் எட்டாவது இடத்தில் விளையாட வைத்துள்ளீர்கள். கரீபியன் தொடரில் கயானா அணிக்காக அவர் 3 – 4வது இடத்தில் விளையாடுவார். அப்படிப்பட்ட அவரை இங்கே ஃபினிஷர் என்று சொல்லி நீங்கள் கீழே களமிறக்குவது குப்பை போன்ற முடிவாகும்”
குப்பை முடிவு:
“முழு நேர பேட்ஸ்மேனான அவரை நீங்கள் இம்ஃபேக்ட் வீரருக்கு முன்பாக பேட்டிங் செய்ய அனுப்ப வேண்டும். அந்த வகையில் முதல் 2 போட்டிகளிலும் ராஜஸ்தான் அணியின் திட்டம் சுமாராக இருக்கிறது. அவர்கள் எடுத்துள்ள வித்தியாசமான திட்டங்களை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒருவேளை ஹெட்மேயர் 5 அல்லது 6வது இடத்தில் வந்து துருவ் ஜுரேலுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியாக விளையாடினால் என்ன நடக்கும்?”
இதையும் படிங்க: இந்திய ஜோடி அஸ்வின் – சஹாலை நம்பாமல்.. இலங்கை ஜோடியை நம்பி தோற்ற ராஜஸ்தான்.. விவரம் இதோ
“அப்படி அவர் அதிரடியாக விளையாடும் போது 9 பந்தில் 12 ரன்கள் எடுக்கும் இம்பேக்ட் வீரர் சுபம் துபே போன்றவர் உங்களுக்கு தேவைப்பட மாட்டார். பின்னர் ஆர்ச்சர் வந்து அந்த அதிரடியான சிக்சர்களை அடிப்பார். எனவே நீங்கள் ஹெட்மேயரை மேலே அனுப்ப வேண்டும். அது ஒரு எக்ஸ்ட்ரா ஸ்பின்னரை பயன்படுத்துவதற்கான வாய்ப்பையும் உங்களுக்கு கொடுக்கும்” என்று கூறினார்.



