ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 26ஆம் தேதி நடைபெற்ற 6வது போட்டியில் ராஜஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா தோற்கடித்தது. கௌகாத்தியில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் 152 ரன்களை மட்டுமே நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 29, துருவ் ஜுரேல் 33 ரன்கள் எடுத்தனர். கொல்கத்தாவுக்கு அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி, மொய்ன் அலி, வைபவ் அராரோ, ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
அடுத்ததாக விளையாடிய கொல்கத்தா அணிக்கு மொய்ன் அலி 5 (12), கேப்டன் ரஹானே 18 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். ஆனால் துவக்க வீரர் குவிண்டன் டீ காக் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தி சதத்தை நழுவ விட்டாலும் 97* (61) ரன்கள் எடுத்தார். அவருடன் இணைந்து விளையாடிய ரகுவன்சி 22* (17) ரன்கள் எடுத்தார்.
தவற விட்ட ராஜஸ்தான்:
அதன் காரணமாக 17.3 ஓவரில் 153-2 ரன்களை எடுத்த கொல்கத்தா தங்களது முதல் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. மறுபுறம் ராஜஸ்தான் கொஞ்சமும் போராடாமலேயே இரண்டாவது தோல்வியை சந்தித்தது. முன்னதாக இந்தத் தொடரில் 5 போட்டிகளுக்குப் பின் கௌகாத்தியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பிட்ச் முதல் முறையாக பவுலர்களுக்கு சாதகமாக இருந்தது.
அதைப் பயன்படுத்திய கொல்கத்தா ஸ்பின்னர்கள் வருண் சக்கரவர்த்தி, மொய்ன் அலி தலா 2 விக்கெட்டுகள் எடுத்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டனர். மறுபுறம் அதே போல அசத்த வேண்டிய வணிந்து ஹஸரங்கா, மஹீஸ் தீக்சனா ஆகியோர் ராஜஸ்தான் அணிக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தனர். சமீபத்திய வருடங்களாக ராஜஸ்தான் அணிக்கு இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் – சஹால் ஆகியோர் சுழல் பந்து வீச்சுத் துறையில் அசத்தலாக விளையாடி வந்தனர்.
இலங்கை ஜோடியால் ஏமாற்றம்:
குறிப்பாக மிடில் ஓவரில் அஸ்வின் கட்டுக்கோப்புடன் பந்து வீசி அதிக ரன்கள் கொடுக்காமல் கட்டுப்படுத்துவார். மறுபுறம் சஹால் விக்கெட்டுகளை எடுத்து வெற்றிகளில் பங்காற்றினார். அப்படிப்பட்ட அவர்களை இந்த வருடம் ராஜஸ்தான் தங்களது அணியிலிருந்து கழற்றி விட்டு ஏலத்திலும் வாங்கத் தவறியது. அவர்களுக்கு இலங்கையைச் சேர்ந்த ஹஸரங்கா, தீக்சனா ஆகியோரை ராஜஸ்தான் வாங்கியது.
இதையும் படிங்க: ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் கொல்கத்தா வீரர் சுனில் நரேன் விளையாடாதது ஏன்? – காரணம் இதோ
ஆனால் இந்தியாவில் எப்போதாவது மட்டுமே விளையாடக்கூடிய அவர்கள் இந்தப் போட்டியில் சுழலுக்கு சாதகமான சூழ்நிலையைப் பயன்படுத்தி ராஜஸ்தானை வெற்றி பெற வைக்கத் தவறினர். அந்த வகையில் இந்திய ஜோடியை நம்பாமல் இலங்கை ஸ்பின் ஜோடியை நம்பிய ராஜஸ்தான் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்துள்ளது. அடுத்த போட்டிகளில் அந்த ஜோடி அசத்துவார்களா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.



