ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் போட்டியிட்டு வருகின்றன. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் விளையாடி வருகிறது. இம்முறை புதிய கேப்டன் ரஜத் படிதார் தலைமையில் விளையாடும் அந்த அணி இதுவரை 6 போட்டிகளில் 4 வெற்றி 2 தோல்விகளை சந்தித்துள்ளது.
ஆச்சரியப்படும் வகையில் பெங்களூரு அணி அந்த 4 வெற்றிகளையும் சென்னை, மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய வெளியூர் மண்ணில் பெற்றுள்ளது. ஆனால் தங்களுடைய சொந்த ஊரில் இருக்கும் எம் சின்னசாமி மைதானத்தில் இதுவரை வெற்றியைப் பதிவு செய்ய முடியாமல் பெங்களூரு அணி தடுமாறி வருகிறது. இந்த வருடம் மட்டுமின்றி வரலாற்றில் சின்னசாமி மைதானத்தில் பெங்களூரு அணி பெரும்பாலும் தோல்விகளையே சந்தித்துள்ளது.
ராசியற்ற பெங்களூரு:
புள்ளிவிவரப்படி சொல்லவேண்டும் எனில் அந்த மைதானத்தில் பெங்களூரு அணி 45* தோல்விகள் சந்தித்துள்ளது. அதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் அதிக தோல்விகளை சந்தித்த அணி என்ற மோசமான வரலாற்றுச் சாதனையையும் பெங்களூரு படைத்துள்ளது. ஃபிளாட்டான பிட்ச், சிறிய பவுண்டரிகள் போன்ற பல்வேறு விஷயங்கள் அந்த மைதானத்தில் ஆர்சிபி அணி தடுமாற்றமாக செயல்பட முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணி வெற்றியைப் பெற தங்கள் உடைமாற்றும் அறையை மாற்ற வேண்டும் என்று முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டௌல் தெரிவித்துள்ளார். இந்த ஐடியா “கண்ணாடியை திருப்பினால் எப்படி ஆட்டோ ஓடும்” என்பது போல் சில்லியாக இருந்தாலும் செய்து பார்க்குமாறு அவர் கூறியுள்ளார். ஏனெனில் வெளியூரில் எளிதாக வெல்லும் பெங்களூரு அணியில் சின்னசாமி மைதானத்திலும் வெல்லும் திறமை இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
வேடிக்கையான ஐடியா:
இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் டௌல் பேசியது பின்வருமாறு. “அவர்கள் டிரெஸ்ஸிங் அறையிலிருந்து எல்லாப் பலகைகளையும் எடுத்து மற்றொன்றில் நகர்த்த வேண்டும் என்று நினைக்கிறேன். ட்ரெஸ்ஸிங் ரூமை மட்டும் மாற்றுங்கள். அந்த மைதானத்தில் சொந்த ஊர் அணிக்கு வழங்கப்பட்டிருக்கும் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து விலகி எதிரணிக்கு வழங்கப்படும் டிரெஸ்ஸிங் ரூமுக்கு சென்று விளையாடுங்கள்”
இதையும் படிங்க: கருண் நாயர் இன்னும் போகல.. இப்போவாச்சும் இந்திய அணியில் அந்த வாய்ப்பை கொடுங்க.. ராயுடு பேட்டி
“இது சிறிய விஷயங்கள். ஆனால் இது இயற்கைக் காட்சியின் மாற்றமாக இருக்கலாம். இது சில்லியாக வேடிக்கையாக தோன்றலாம். ஆனால் யாரேனும் அதைச் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் அது ஆர்சிபி அணியாகவே இருக்கும். கூச்சமான செய்கைகளைக் கீழே இறக்கி வைத்து விட்டு இதை முயற்சி செய்துப் பார்க்கவும்” என்று கூறினார்.



