
இலங்கை அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் தற்போது ஜிம்பாப்வே அணியானது விளையாடி வருகிறது. ஏற்க்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரினை இலங்கை அணி கைப்பற்றியிருந்த வேளையில் தற்போது டி20 தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த டி20 தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றிருந்த வேளையில் இரண்டாவது t20 போட்டியானது நேற்று ஹராரே நகரில் நடைபெற்று முடிந்தது.
இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜிம்பாப்வே அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்த டி20 தொடரை தற்போது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இலங்கை அணி ஜிம்பாப்வே அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 80 ரன்களை மட்டுமே குவித்தது. பின்னர் 81 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஜிம்பாப்வே அணி 14.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது ஜிம்பாப்வே அணி சார்பாக பந்துவீச்சில் அசத்தலாக செயல்பட்ட கேப்டன் சிக்கந்தர் ராசா 4 ஓவர்கள் வீசி 11 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதினை பெற்றதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி மற்றும் தற்போதைய கேப்டனான சூரியகுமார் ஆகியோரது சாதனையை சிக்கந்தர் ராசா முறியடித்துள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : சர்வதேச டி20 போட்டிகளில் அதிகமுறை ஆட்டநாயகன் விருதினை பெற்ற வீரர்களாக விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் 14 முறை ஆட்டநாயகன் விருதினை வென்று முதலிடத்தில் இருந்தனர்.
இதையும் படிங்க : கருண் நாயர் கேயர் கிட்டத்தட்ட முடிஞ்ச்சு.. ஆனா அவரோட கேரியர் மலரப்போகுது.. ஆகாஷ் சோப்ரா பேட்டி
இந்நிலையில் அவர்கள் இருவரையும் பின்னுக்கு தள்ளியுள்ள சிக்கந்தர் ராசா 17-வது முறையாக டி20 போட்டிகளில் ஆட்டநாயகன் விருதினை வென்று சர்வதேச டி20 போட்டிகளில் அதிகமுறை ஆட்டநாயகன் விருதினை வென்ற வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.