
கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 15 வருடங்கள் கழித்து அதனுடைய சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்கா தோற்கடித்தது. அடுத்ததாக கௌகாத்தியில் நடைபெறும் 2வது போட்டியிலும் இந்தியா வெற்றி பெற 549 என்ற இமாலய இலக்கை தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்துள்ளது. அதைத் துரத்தும் இந்தியா 4வது நாள் முடிவில் 29/2 என தடுமாறி வருகிறது.
அதனால் அப்போட்டியிலும் இந்தியா வெற்றி பெறுவது கடினமாகியுள்ளது. ஒருவேளை இந்தியா போராடி போட்டியை டிரா செய்தாலும் 1 – 0 (2) என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா கோப்பையை வெல்லும். அப்படி நடந்தால் 2000க்குப்பின் 25 வருடங்கள் கழித்து இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வென்று தென் ஆப்பிரிக்கா சாதனை படைக்கும்.
இந்நிலையில் இந்திய அணியை கிரோவெல் என்ற ஆங்கில சொல்லை பயன்படுத்தி தோற்கடிக்க விரும்புவதாக தென்னாப்பிரிக்கா பயிற்சியாளர் சுக்ரி கோன்ராட் பேசியுள்ளது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. அதாவது கிரோவெல் என்ற சொல்லிற்கு ஆங்கிலத்தில் இழிவான பல பொருள்கள் இருக்கின்றன. குறிப்பாக 1976ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை இங்கிலாந்து கேப்டன் டோனி கிரைக் “க்ரோவெல்” அதாவது “இனவெறி அடிப்படையில் அடிமை” என்ற பொருளில் சொன்னார்.
அதனால் ஒவ்வொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் ரத்தம் கொதிப்பதாக கேப்டன் க்ளைவ் லாய்ட் பதிலடி கொடுத்தார். அதே வேகத்தில் வெறித்தனமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 3 – 0 (3) என்ற கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்து டோனி கிரைக் முகத்தில் கரியைப் பூசியது. தற்போது அதே வார்த்தையை இந்திய அணியைப் பற்றி குறிப்பிடும் போது தென்னாப்பிரிக்க பயிற்சியாளர் சுக்ரி தெரிவித்துள்ளார்.
ஆனால் இங்கே தாம் இனவெறி அல்லது இழிவான பொருளை வைத்து இந்தியாவை சொல்லவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் இந்தியா தங்களது காலால் களத்தில் அதிக நேரத்தை செலவிட விரும்பினோம். நாங்கள் அவர்கள் உண்மையாக க்ரோவலாக இருப்பதை விரும்பினோம். இங்கே அதற்கான பொருளை நான் எடுத்துக்கொள்கிறேன்”
இதையும் படிங்க: ஐசிசி டி20 உ.கோ 2026 அட்டவணை: இந்தியா – பாகிஸ்தான் மோதல் எப்போது? ஃபார்மட் விவரம் இதோ
“அவர்களை முழுமையாக போட்டியிலிருந்து வெளியேற்றிய பின்னர் கடைசி நாளில் முடிந்தால் தாக்குப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்ல விரும்பினோம். அதனாலேயே 500 ரன்கள் கடந்தும் டிக்ளர் செய்ய தாமதப்படுத்தினோம்” என்று கூறினார். இதிலிருந்து தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் வெற்றி கிடைக்கப் போகும் மமதையால் இந்தியாவை இழிவாகப் பேசினாரா? என்று இந்திய செய்தியாளர்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.