IND vs WI : தேவையா இது, வித்யாசமான ஷாட் அடிக்க முயற்சித்து பல்ப் வாங்கிய இளம் இந்திய வீரர் – வீடியோ உள்ளே

Shubman Gill Scoop
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஜூலை 24-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் வெறும் 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி பெற்றது. குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு 311/6 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கி 49 ஓவர்கள் வரை நங்கூரமாகவும் இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாகவும் பேட்டிங் செய்த ஷாய் ஹோப் 8 பவுண்டரி 3 சிக்சருடன் சதமடித்து 115 (135) ரன்கள் குவித்தார். அவருடன் கேப்டன் நிக்கலஸ் பூரன் 74 (77) ரன்களும் கெய்ஸ் மேயர்ஸ் 39 (23) ரன்களும் எடுத்தனர்.

இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஷார்துல் தாகூர் 3 விக்கெட்களை எடுத்தார். அதை தொடர்ந்து 312 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ஷிகர் தவான் 13 (31) ரன்களில் ஆட்டமிழக்க மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் 43 (49) ரன்களில் அவுட்டானார். அப்போது வந்த சூர்யகுமார் யாதவ் 9 (8) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றியதால் 79/3 என தடுமாறிய இந்தியாவுக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் – ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் 4-வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்தனர்.

- Advertisement -

சாதித்த இந்தியா:
அதில் ஸ்ரேயாஸ் அய்யர் 63 (71) ரன்களிலும் சஞ்சு சாம்சன் 54 (51) ரன்களிலும் சீரான இடைவெளிகளில் ஆட்டமிழந்த நிலையில் அடுத்து வந்த தீபக் ஹூடா தனது பங்கிற்கு 33 (36) ரன்கள் குவித்து முக்கிய நேரத்தில் அவுட்டானார். கடைசி கட்ட நேரங்களில் ஷார்துல் தாக்கூர் 3 (6) ரன்களிலும் ஆவேஷ் கான் 10 (12) ரன்களில் ஆட்டமிழந்ததால் பின்னடைவை சந்தித்த இந்தியாவுக்கு லோயர் மிடில் ஆர்டரில் களமிறங்கி கடைசி வரை அவுட்டாகாமல் 3 பவுண்டரி 5 சிக்சருடன் 64* (35) ரன்களை 182.86 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் விளாசிய அக்சர் படேல் இந்தியாவுக்கு திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அக்சர் பட்டேல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். மறுபுறம் பேட்டிங்கில் பெரிய அளவில் ரன்களைச் சேர்த்த வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ஆரம்பம் முதலே சீரான விக்கெட்டுகளை எடுத்தாலும் கடைசி நேரத்தில் சொதப்பலான பந்துவீச்சை வீசியதால் சொந்த மண்ணில் தொடரை இழந்து தலைகுனிவை சந்தித்தது. ஏனெனில் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களுடன் முதல் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற இந்தியா இப்போட்டியிலும் வென்றதால் 2 – 0* (3) என்ற கணக்கில் தொடரை வென்று சாதித்துக் காட்டியுள்ளது.

- Advertisement -

புதுமையான முயற்சி:
முன்னதாக இப்போட்டியில் 48 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த ஓபனிங் ஜோடியில் முதலில் தடுமாற்றமாக விளையாடிய ஷிகர் தவான் அவுட்டான பின்பு அடுத்த 3 ஓவர்களில் 8 ரன்களைக் கூட எடுக்க முடியாத இந்தியா அழுத்தத்தை சந்தித்தது. அதை விடுவிப்பதற்காக மறுபுறம் சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்த மற்றொரு இளம் தொடக்க வீரர் சுப்மன் கில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெய்ல் மேயர்ஸ் வீசிய 17-வது ஓவரின் 4-வது பந்தில் கீப்பருக்கு பின்பகுதியில் பவுண்டரி விளாசும் எண்ணத்தில் வித்தியாசமான ஸ்கூப் ஷாட் அடிப்பதற்கு முயற்சித்தார்.

அதை பிடிப்பதற்காக விக்கெட் கீப்பரும் தயாரானார். ஆனால் பந்து வரும் வேகத்தை சரியாக கணிக்காத சுப்மன் கில் முன்கூட்டியே அடித்ததால் பேட்டின் நுனிப்பகுதியில் பட்ட பந்து கீப்பருக்கு பின்னே செல்லாமல் கேட்ச்சாக மாறி நேராக அந்த பந்தை வீசிய கெய்ல் மேயர்ஸ் கைகளில் அழகாக தஞ்சமடைந்தது. அதனால் பல்ப் வாங்கிய சுப்மன் கில் புதுமையான முயற்சியில் தவறு செய்து விட்டோமே என்ற வகையில் லேசான சிரிப்புடன் ஒரு சில நொடிகளுக்குப் பின் சோகத்துடன் பெவிலியன் திரும்பினார்.

இதையும் படிங்க: IND vs WI : ஜெர்ஸியில் பெயரை மறைத்து விளையாடிய தீபக் ஹூடா – பிசிசிஐயை கலாய்க்கும் ரசிகர்கள், காரணம் இதோ

பொதுவாக இதுபோன்ற ஷாட்டை இலங்கையின் முன்னாள் தொடக்க வீரர் திலகரத்னே தில்ஷன் அடித்து பிரபல படுத்தியதால் தில்ஸ்கூப் என்று அழைக்கப்படுகிறது. மேலும் உலகிலேயே இதை டு பிளேஸிஸ், ப்ரெண்டன் மெக்கல்லம் உள்ளிட்ட ஒரு சில வீரர்கள் மட்டுமே லாவகமாக அடிக்க கூடியவர்களாக இருக்கின்றனர். இருப்பினும் ஜாம்பவான்களான அவர்களே நிறைய தருணங்களில் அவுட்டாகியுள்ளார்கள். எனவே இந்த புதுமையான முயற்சிக்கு முன்னதாக வரும் காலங்களில் நல்ல பயிற்சி எடுத்துக் கொண்டு பின்னர் முயற்சித்தால் சுப்மன் கில்  வெற்றி பெறலாம் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

Advertisement