IND vs WI : ஜெர்ஸியில் பெயரை மறைத்து விளையாடிய தீபக் ஹூடா – பிசிசிஐயை கலாய்க்கும் ரசிகர்கள், காரணம் இதோ

Deepak Hooda Jersey
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றது. அந்த நிலைமையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2-வது போட்டி ஜூலை 24-ஆம் தேதியான நேற்று குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. வாழ்வா – சாவா என்ற அப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு 311/6 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கி 49 ஓவர்கள் வரை இந்தியாவுக்கு சிம்மசொப்பனமாக அபாரமாக பேட்டிங் செய்த ஷாய் ஹோப் 8 பவுண்டரி 3 சிக்சருடன் சதமடித்து 115 (135) ரன்கள் குவித்தார்.

அவருடன் கேப்டன் நிக்கோலஸ் பூரன் 74 (77) ரன்களும் கெய்ல் மேயர்ஸ் 39 (23) ரன்களும் ப்ரூக்ஸ் 35 (36) ரன்களும் எடுத்தனர். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக சர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 312 என்ற இலக்கை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ஷிகர் தவான் 13 (31) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் 43 (49) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது வந்த சூர்யகுமார் யாதவ் 9 (8) ரன்களில் அவுட்டானதால் 79/3 என இந்தியா தடுமாறியது.

- Advertisement -

சாதித்த இந்தியா:
அந்த சூழ்நிலையில் 4-வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் முக்கியமான பார்ட்னர்ஷிப் அமைத்த ஷ்ரேயஸ் ஐயர் 63 (71) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்த சில ஓவர்களில் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த சஞ்சு சாம்சன் 3 பவுண்டரி 3 சிக்சருடன் 54 (51) ரன்களில் அவுட்டானார். அப்போது களமிறங்கிய தீபக் ஹூடா 33 (36) ரன்களில் அவுட்டான நிலையில் ஷார்துல் தாகூர் 3 (6) ரன்களிலும் ஆவேஷ் கான் 10 (12) ரன்களிலும் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர்.

ஆனாலும் 74 பந்துகளில் 114 ரன்கள் தேவை என்ற நிலைமையிலிருந்து எதிர்ப்புறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் அதிரடியை குறைக்காமல் அட்டகாசமாக பேட்டிங் செய்த அக்சர் பட்டேல் 3 பவுண்டரி 5 சிக்சருடன் தனது முதல் அரை சதத்தை அடித்து 64* (35) ரன்களை 182.86 என்ற அபாரமான ஸ்டிரைக் ரேட்டில் விளாசி பினிஷிங் கொடுத்தார். அதனால் 49.4 ஓவரில் 312/8 ரன்களை எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற இந்தியா கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத நிலைமையில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களுடன் வெஸ்ட் இண்டீசை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து 2 – 0* (3) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி சாதித்துள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றி அக்சர் பட்டேல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

பெயரை மறைத்து:
முன்னதாக இப்போட்டியில் 1 விக்கெட் மற்றும் 33 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய இளம் வீரர் தீபக் ஹூடா இந்த போட்டியில் தனது ஜெர்சியில் பின்புறம் இருக்கும் பெயரை டேப் போட்டு ஒட்டிக்கொண்டு விளையாடியது ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. குறிப்பாக 24 என்ற நம்பரை பார்த்த சில ரசிகர்கள் மற்றொரு இந்திய வீரர் மற்றும் ஹர்டிக் பாண்டியாவின் சகோதரர் க்ருனால் பாண்டியாவுடன் ஏற்பட்டுள்ள புதிய நட்பை வளர்க்கும் வகையில் இந்த ஜெர்சியை அணிந்து விளையாடுவதாக கலகலத்தனர்.

ஏனெனில் கடந்த 2021இல் பரோடா அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் ஒரே அணியில் விளையாடிய தம்மை கேப்டன் க்ருனால் பாண்டியா கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பிய தீபக் ஹூடா அடுத்த சில மாதங்களில் ராஜஸ்தானுக்கு குடிபெயர்ந்து அந்த அணிக்காக விளையாடி பின்னர் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றார். அவர்களிடையே ஏற்பட்ட மோதல் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஐபிஎல் 2022 தொடரில் எதிர்பாராதவிதமாக லக்னோ அணிக்காக இருவரும் ஒன்றாக விளையாட ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.

காசு இல்லையா:
அதனால் இருவரும் சண்டை போட்டுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விக்கெட் எடுத்த தருணங்களில் இருவரும் ஒன்றாக கட்டிப் பிடித்து இறுதியில் சகோதரர்களிடையே சண்டைகள் வரத்தான் செய்யும் என்று நட்பு பாராட்டி கருத்து தெரிவித்தது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. எனவே அந்த நட்பை வளர்க்கும் விதமாகவே தீபக் ஹூடா இவ்வாறு செய்ததாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் டேப் ஓட்டுவதற்கு முன்பாகவே 24 நம்பரை கொண்ட அந்த ஜெர்சியில் மற்றொரு இளம் இந்திய வீரர் பிரசித் கிருஷ்ணாவின் பெயர் இருந்ததையும் கண்டு பிடித்த ரசிகர்கள் இப்போட்டியில் அவர் நீக்கப்பட்டதால் அவருடைய ஜெர்சியை தீபக் ஹூடா அணிந்து விளையாடுவதாக கண்டுபிடித்தனர். ஆனால் டேப் ஒட்டிக் கொண்டு விளையாடும் அளவுக்கு ஹூடாவி ஜெர்சிக்கு என்ன ஆயிற்று? ஒரு வீரருக்கு ஒரு ஜெர்சி தானா? கோடிகளை சம்பாதிக்கும் பிசிசிஐ இந்திய வீரர்களுக்கு பேக் அப் ஜெர்சி கொடுப்பதற்குக் கூட காசு இல்லையா என்றும் ரசிகர்கள் கலாய்க்கின்றனர்.

Advertisement