ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று நியூ சண்டிகார் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது குவாலிபயர் போட்டியில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
ராஜஸ்தான் அணிக்கெதிரான வெற்றிக்கு பிறகு : சுப்மன் கில் பேச்சு
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது. பின்னர் 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 219 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த வெற்றி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது : இந்த போட்டியில் நாங்கள் உண்மையிலேயே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக உணர்கிறோம். அதிலும் குறிப்பாக நானும் சாய் சுதர்சனும் பேட்டிங்கில் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்திருந்தோம். எங்கள் இருவரில் ஒருவர் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி விளையாட வேண்டும் என்று நினைத்தோம்.
இறுதியில் இருவருமே மிகச் சிறப்பாக விளையாடியதில் மகிழ்ச்சி. சாய் சுதர்சன் ஹிட் விக்கெட்டானதை என்னால் நம்ப முடியவில்லை. ஏனெனில் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் இதுபோன்று நடந்துள்ளது. இதுவரை நான் இதுபோன்ற விடயத்தை பார்த்ததில்லை. சமூக வலைதளங்களில் சாய் சுதர்சனின் கையில் டேப் ஒட்டியவாறு ஒரு வீடியோவை பார்த்தேன்.
இதையும் படிங்க : சேசிங் சாதனையுடன் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த குஜராத் டைட்டன்ஸ் அணி – விவரம் இதோ
அடுத்த போட்டியில் நான் அதை செய்யலாம் என்று நினைக்கிறேன் என நகைச்சுவையாக கூறினார். மேலும் இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் நிச்சயம் அடுத்த போட்டிக்கு மீண்டும் புத்துணர்ச்சியோடு வந்து சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவோம் என்றும் சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.



