
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த ஜூலை 31-ஆம் தேதி ஓவல் மைதானத்தில் துவங்கிய நடப்பு ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியானது இன்று நடைபெற்ற ஐந்தாம் நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியை பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியானது இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்தது. அந்த வகையில் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 374 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்கினை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியானது 367 ரன்களை மட்டுமே குவித்ததால் இறுதியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றிருந்தது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது : உண்மையிலேயே இந்த தொடர் இரண்டு அணிகளுக்குமே ஒரு நல்ல தொடராக அமைந்தது. ஒவ்வொரு போட்டியுமே நான்காவது மற்றும் ஐந்தாவது நாட்கள் வரை விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது.
இந்த தொடரில் ஒரு அணியாக நாங்கள் செயல்பட்ட விதம் உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளரான முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் செயல்பட்ட விதம் மிகச் சிறப்பாக இருந்தது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தான் இந்த போட்டியின் வெற்றிக்கு முழு காரணம்.
பந்து வீச்சாளர்கள் இப்படி செயல்படும்போது ஒரு கேப்டனாக என்னுடைய வேலையும் சுலபமாகிறது. இந்த போட்டியின் போது ஒரு கட்டத்தில் நாங்கள் சற்று பதட்டம் அடைந்தாலும் இறுதியில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. இந்த தொடர் முழுவதுமே முகமது சிராஜ் தனது அற்புதமான பந்துவீச்சினை வெளிப்படுத்தியுள்ளார். அதேபோன்று அணியில் விளையாடிய மற்ற பவுலர்களும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: வெறும் 6 ரன்ஸ்.. பஸ்பால் இங்கிலாந்துக்கு மண்டியிடாத இந்தியா.. சரித்திரம் காணாத மிராக்கிள் சாதனை வெற்றி
ஒவ்வொரு கேப்டனுக்கும் முகமது சிராஜ் போன்ற ஒரு ட்ரீம் பிளேயர் அவசியம். இந்த ஐந்து போட்டிகளிலும் அவர் தன்னுடைய முழு பங்களிப்பையும் முழு மனதார வழங்கியுள்ளார். அவர் எங்களது அணியில் இருப்பது எங்களுடைய அதிர்ஷ்டம் என இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சாளர்களை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.