அகமதாபாத் நகரில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 59-வது லீக் போட்டியில் விளையாடிய சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியானது ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது ஐந்தாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தினை பிடித்துள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சென்னை அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்களை குவித்தது. குஜராத் அணி சார்பாக அதிகபட்சமாக சாய் சுதர்சன் 103 ரன்களையும் சுப்மன் கில் 104 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது :
20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறுகையில் : இந்த போட்டியில் சிறிய தசைப்பிடிப்பு ஏற்பட்டதாலேயே முதலில் பேட்டிங் செய்து விட்டு இரண்டாவதாக நான் பீல்டிங் செய்ய களத்திற்கு வரவில்லை.
இது போன்ற மைதானத்தில் ஒரு லட்சம் ரசிகர்கள் உங்களை ஆதரித்து கோஷமிடும் போது நிச்சயம் உங்களால் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். அந்த வகையில் ரசிகர்கள் கொடுத்த ஆதரவினாலே நாங்கள் அதிரடியாக ரன்களை குவித்தோம். அதுமட்டுமின்றி முதலில் பேட்டிங் செய்யும்போது எந்த இலக்கையும் நாங்கள் நினைத்து விளையாடவில்லை. கிடைக்கும் வாய்ப்புகள் எல்லாம் ரன்களை குவிக்க வேண்டும் என்பதை மட்டுமே நினைத்து விளையாடினோம்.
சாய் சுதர்சனுக்கும் எனக்கும் இடையே நல்ல பிணைப்பு இருக்கிறது. கடந்த ஆண்டு நாங்கள் நிறைய போட்டிகளில் ஒன்றாக விளையாடியிருந்தோம். தற்போது இந்த ஆண்டும் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறோம். அவருடன் அமைத்த இந்த பார்ட்னர்ஷிப் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மோகித் சர்மா கடந்த இரண்டு ஆண்டுகளாகவே எங்களுக்கு மிகச் சிறப்பாக பந்துவீசி வருகிறார்.
இதையும் படிங்க : நாங்க பெரிய தப்பு பண்ணிட்டோம்.. குஜராத் அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு – ருதுராஜ் கெய்க்வாட் பேட்டி
இந்த ஆண்டு ஒரு சில போட்டிகள் அவருக்கு மோசமாக அமைந்தாலும் முக்கியமான இந்த போட்டியில் அவர் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். ஒரு கட்டத்தில் நாங்கள் 250 ரன்கள் வரை அடிக்கலாம் என்று யோசித்தோம். ஆனால் கடைசி 2-3 ஓவர்கள் சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர். அதனால் 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம் என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.



