இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 59-ஆவது லீக் போட்டியானது நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற சென்னை அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் அணி சென்னை அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர் கொண்டு 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 231 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது. குஜராத் அணி சார்பாக துவக்க வீரர்கள் சாய் சுதர்சன் 103 ரன்களையும், சுப்மன் கில் 104 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பின்னர் 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சென்னை அணி சார்பாக டேரல் மிட்சல் 63 ரன்களையும், மொயின் அலி 56 ரன்களையும் குவித்தனர்.
குஜராத் அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா 3 விக்கெட்டுகளையும், ரஷீத் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில் : இந்த போட்டியில் பீல்டிங்கில் எங்களது செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது.
பீல்டிங்கில் எங்களது மோசமான செயல்பாடு எங்களை இந்த போட்டியில் பின்னுக்கு தள்ளியது. அதோடு நாங்கள் 10 முதல் 15 ரன்கள் வரை கூடுதலாக வழங்கி விட்டதாக நினைக்கிறேன். களத்தில் நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டு இருந்தாலும் எங்களால் அவர்களை தடுத்து நிறுத்த முடியவில்லை. உண்மையாகவே குஜராத் அணியின் வீரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதையும் படிங்க : ஷ்ரேயாஸ் ஐயரையும், இஷான் கிஷனையும் நீக்கியது நான் இல்ல.. அவர்தான் – ஜெய் ஷா கொடுத்த விளக்கம்
குறிப்பாக சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவருமே சிறப்பாக விளையாடி வரும் வேளையில் அவர்களை கண்ட்ரோல் செய்ய முடியவில்லை. அவர்கள் இருவரும் மிகவும் வேகமாக ரன் குவித்தனர். அடுத்து சென்னைக்கு சென்று அங்கு ஒரு மிக முக்கியமான போட்டியில் விளையாட இருக்கிறோம் என ருதுராஜ் கெய்க்வாட் கூறியது குறிப்பிடத்தக்கது.