இந்தியா ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டனான சுப்மன் கில் கடந்த ஆண்டு நடைபெற்ற 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்திருந்தார். ஆனால் அந்த தொடரில் அவரது செயல்பாடு மிக மோசமாக இருந்ததன் காரணமாக 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
யாருக்கும் என்னை நிரூபிக்க அவசியமில்லை : சுப்மன் கில்
அவருக்கு பதிலாக இடம்பிடித்த இஷான் கிஷன் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதால் அவரே இந்திய டி20 அணியில் தொடர்வார் என்று தெரிகிறது. இதன் காரணமாக இந்திய அணியின் எதிர்கால கேப்டனாக பார்க்கப்படும் சுப்மன் கில் டி20 அணிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் அவருக்கு மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் தனக்கு இடம் கிடைக்காதது குறித்து சுப்மன் கில் சில வெளிப்படையான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் என்னை தேர்வு செய்யாததில் எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. கடந்து மூன்று நான்கு சீசன்களாகவே ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறேன். யாருக்கும் என்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தமுறை நிச்சயம் நாங்கள் தான் ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றுவோம் என்று சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ஆர்.சி.பி அணிக்கு விழுந்த மற்றொரு அடி.. கடைசி நேரத்தில் விலகிய நட்சத்திர வீரர் – விவரம் இதோ
இதுவரை 118 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள சுப்மன் கில் 3866 ரன்களை குவித்துள்ளார். இதில் நான்கு சதங்கள் மற்றும் 26 அரை சதங்கள் அடங்கும். அதுமட்டுமின்றி அவர் கூறியது போன்றே கடந்த 3 ஐ.பி.எல் சீசன்களில் அதிக ரன்களை குவித்த வீரராகவும் அவரே உள்ளது குறிப்பிடத்தக்கது.



