இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நாளை மார்ச் 28-ஆம் தேதி துவங்கி மே 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அட்டவணை ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது இந்த தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது அணியின் வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.
ஆர்.சி.பி அணியில் இருந்து விலகிய நட்சத்திர வீரர் :
இந்த தொடரானது துவங்க இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள வேளையில் ஏற்கனவே பல வீரர்கள் காயம் காரணமாக இந்த தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதோடு ஒரு சில வீரர்கள் தனிப்பட்ட காரணங்களாலும் இந்த தொடரில் இருந்து வெளியேறி உள்ளதால் பல்வேறு அணிகளும் பெரிய பின்னடைவை சந்தித்து வருகின்றன.
அந்த வகையில் இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்க இருக்கும் ஆர்.சி.பி அணியும் பெரிய சிக்கலை தற்போது எதிர்கொண்டுள்ளது. ஏனெனில் ஏற்கனவே அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜாஸ் ஹேசல்வுட் காயம் காரணமாக இந்த தொடரில் பங்கேற்க முடியாத சூழலில் இருக்கிறார். முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்ட வேளையில் அவர் எப்போது அணியுடன் இணைவார் என்பது உறுதியாகவில்லை.
இவ்வேளையில் மேலும் ஒரு அடியாக அந்த அணியில் இடம்பெற்றிருந்த இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாராவும் உடற்தகுதி சான்றிதழ் இல்லாமல் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். இலங்கை கிரிக்கெட் வாரியம் நடத்திய உடற்தகுதி தேர்வில் அவர் தோல்வியடைந்துள்ளால் இந்த ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்க இலங்கை கிரிக்கெட் வாரியம் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : இஷான் கிஷனுக்கு அந்த அனுபவம் இருக்கு.. எனவே கவலையில்லை – பேட் கம்மின்ஸ் ஆதரவு
இதனால் நுவான் துஷாராவும் இந்த தொடரில் இருந்து வெளியேறி உள்ளார். ஜோஷ் ஹேசல்வுட்டிற்கு பதிலாக இவரே முதல் சில போட்டிகள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவரும் விலகியுள்ளது ஆர்.சி.பி அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



