தோனியை மொத்த இந்தியாவும் மிஸ் பண்ணுது.. என் மேல எனக்கே ஏமாற்றமா இருக்கு.. சுப்மன் கில் பேட்டி

Shubman Gill 4
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன. அதில் இதுவரை நடந்த 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* (5) என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. முன்னதாக இந்த தொடரில் பேட்டிங் துறையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில் தடுமாற்றமாகவே செயல்பட்டு இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

இந்திய பேட்டிங் துறையின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் ஒரு கட்டத்தில் பாராட்டப்பட்ட அவர் சமீப காலங்களாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வருகிறார். குறிப்பாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு பின் 6 போட்டிகளில் விளையாடிய அவர் அரை சதம் கூட அடிக்காமல் தடுமாறி வந்தார். அந்த நிலையில் இத்தொடரின் 2வது போட்டியின் 2வது இன்னிங்ஸில் சதமடித்த அவர் 104 குவித்து வெற்றியில் பங்காற்றினார்.

- Advertisement -

எனக்கே ஏமாற்றம்:
இருப்பினும் 3வது போட்டியில் மீண்டும் டக் அவுட்டான அவர் இரண்டாவது இன்னிங்ஸில் முக்கியமான 91 ரன்கள் அடித்து வெற்றியில் பங்காற்றி தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். அந்த வரிசையில் முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் பிப்ரவரி 23ஆம் தேதி துவங்கும் 4வது போட்டியிலும் பெரிய ரன்கள் குவிக்கும் முனைப்புடன் சுப்மன் கில் விளையாட உள்ளார்.

இந்நிலையில் இந்த தொடரில் இதுவரை எதிர்பார்ப்புக்கு நிகராக செயல்படாதது தமக்கே ஏமாற்றத்தை கொடுப்பதாக சுப்மன் கில் கூறியுள்ளார். மேலும் ராஞ்சி என்றதுமே நினைவுக்கு வரும் எம்எஸ் தோனியை இந்திய வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தேசமும் மிஸ் செய்வதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“மொத்த இந்தியாவும் மஹி பாயை மிஸ் செய்கிறது. ராஞ்சி அல்லது உலகில் நீங்கள் எங்கே விளையாடினாலும் அவரை இந்திய அணி மிஸ் செய்யும். பொதுவாக பலவற்றை நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பது மிகவும் கடினமாகும். அந்த வகையில் வெளிப்புறத்தில் என் மீது இருக்கும் எதிர்பார்ப்புகள் பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் என் மீதான சொந்த எதிர்பார்ப்புக்கு நிகராக நான் செயல்படாதது எனக்கே ஏமாற்றமாக இருக்கிறது”

இதையும் படிங்க: கிங் கோலியை முந்திய பாபர் அசாம்.. கிறிஸ் கெயில் சாதனையை உடைத்து புதிய உலக சாதனை

“இருப்பினும் இரண்டாவது முறையாக நீங்கள் வாய்ப்பு பெறும் போது அடுத்ததாக என்ன இருக்கும் என்பதை பார்த்து பந்தை அடிப்பது முக்கியம். கடந்த காலத்தை மறந்து நிகழ்காலத்தில் கவனம் செலுத்துவதே பெரிய வீரர்களுக்கும் சராசரி வீரர்களுக்கும் உள்ள வித்தியாசமாகும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து நான்காவது போட்டியிலும் விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமல் இந்திய அணி விளையாடத் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement