மீண்டும் வந்த ஜெய்ஸ்வால்.. கலங்கிய குல்தீப்.. தோனிக்கு பின் 12 வருடம் கழித்து கில்லுக்கு நேர்ந்த பரிதாபம்

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட் நகரில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 15ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 445 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 132, ரவீந்திர ஜடேஜா 112, சர்பராஸ் கான் 62 ரன்கள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து பென் டக்கெட் அதிரடியான சதமடித்து 153 ரன்கள் குவித்ததால் 224/2 என்ற நல்ல நிலையில் இருந்தது.

ஆனால் அதன் பின் அபாரமாக பந்து வீசி அந்த அணியை 319 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 126 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 19, ரஜத் படிடார் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். ஆனால் மறுபுறம் நிதானமாக விளையாடிய மற்றொரு துவக்க வீரர் ஜெய்ஸ்வால் அடுத்ததாக வந்த சுப்மன் கில்லுடன் சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

- Advertisement -

பரிதாப கில்:
அதில் ஆரம்பத்தில் மெதுவாக விளையாடிய ஜெய்ஸ்வால் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி அபாரமான சதமடித்து 102* ரன்கள் குவித்தார். இருப்பினும் மூன்றாவது நாள் மாலையில் தசைப் பிடிப்பு காயத்தை சந்தித்ததால் மேற்கொண்டு விளையாட முடியாத அவர் பாதியிலேயே ரிட்டயர்டு ஹார்ட்டாகி சென்றார். அந்த நிலையில் இன்று துவங்கிய நான்காவது நாள் ஆட்டத்தில் அவருடன் விளையாடிய சுப்மன் கில் தொடர்ந்து அரை சதம் கடந்து சதத்தை நெருங்கினார்.

அதே போல எதிர்ப்புறம் நைட் வாட்ச்மேனாக வந்த குல்தீப் யாதவ் தம்முடைய பங்கிற்கு 3 பவுண்டரி 1 சிக்சரை பறக்க விட்டு இங்கிலாந்துக்கு தொல்லை கொடுத்தார். அந்த வரிசையில் 64வது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட அவர் தூக்கி அடிக்க முயற்சித்து சிங்கள் எடுக்க ஓடினார். இருப்பினும் அதற்குள் பென் ஸ்டோக்ஸ் பந்தை எடுத்ததால் மீண்டும் அவர் தன்னுடைய வெள்ளைக் கோட்டிற்குள் சென்றார். ஆனால் அவரை நம்பி வெளியே வந்த சுப்மன் கில் 91 ரன்களில் பரிதாபமாக ரன் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

சமீப காலங்களில் தடுமாறி வரும் அவர் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டானதால் ஏற்பட்ட விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2வது இன்னிங்ஸில் நன்றாக விளையாடியும் கடைசியில் சதமடிக்காததால் கோபமான ஏமாற்றத்துடன் சென்றார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வினோ மன்கட் (1953), ஜெய்ஸிம்ஹா (1960), திலிப் வெங்சர்கார் (1982), அஜய் அஜய் (1997), எம்எஸ் தோனி (2012) ஆகியோருக்கு பின் 90 ரன்களில் ரன் அவுட்டான 5வது இந்திய வீரர் என்ற பரிதாபத்தை கில் சந்தித்தார்.

இதையும் படிங்க: 3வது டெஸ்ட் போட்டியில் மீண்டும் இணையும் அஸ்வின்.. எப்போது வருவார்? பவுலிங் செய்ய முடியுமா? பிசிசிஐ அறிவிப்பு

மறுபுறம் அவரை ரன் அவுட்டாக்கியதால் மனமுடைந்த குல்தீப் யாதவ் அடுத்த ஓவர்களில் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து காயத்திலிருந்து குணமடைந்து களமிறங்கிய ஜெய்ஸ்வால் தொடர்ந்து பேட்டிங் செய்து 149* ரன்கள் எடுத்துள்ளார். அவருடன் விளையாடும் சர்பராஸ் கான் 22* ரன்கள் எடுத்துள்ளதால் 4வது நாள் உணவு இடைவெளியில் 314/4 ரன்கள் எடுத்துள்ள இந்தியா 440 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Advertisement