ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் ஒன்பதாம் தேதி அகமதாபாத் நகரில் 23வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ராஜஸ்தானை 58 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் தோற்கடித்தது. அதில் முதலில் விளையாடிய குஜராத் சாய் சுதர்சன் 82, ஜோஸ் பட்லர் 36, ஷாருக்கான் 36 ரன்கள் எடுத்த உதவியுடன் 218 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
அடுத்ததாக ராஜஸ்தான் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக பேட்டிங் செய்து சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 19.2 ஓவரில் 159 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக கேப்டன் சஞ்சு சாம்சன் 41, ஹெட்மயர் 52 ரன்கள் எடுத்தும் படுதோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. குஜராத்துக்கு அதிகபட்சமாக தமிழகத்தின் சாய் கிஷோர் 2, ரசித் கான் 2, பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
குஜராத் வெற்றி:
இதையும் சேர்த்து குஜராத் நான்காவது வெற்றியைப் பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. மறுபுறம் ராஜஸ்தான் தங்களது மூன்றாவது தோல்வியைப் பதிவு செய்து 7வது இடத்திற்கு சரிந்துள்ளது. குஜராத்தின் இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய தமிழக வீரர் சாய் சுதர்சன் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இந்தப் போட்டியில் அனைத்து வீரர்களும் அசத்தியதால் ஆட்டநாயகனை தேர்ந்தெடுப்பது வர்ணனையாளர்களுக்கு கடினமாக இருந்ததாக கேப்டன் சுப்மன் கில் கூறியுள்ளார்.
அந்தளவுக்கு தங்களுடைய அணியின் தரம் சிறப்பாக இருப்பதாக கூறும் சாய் கிஷோர் போன்ற அனைத்து பவுலர்களும் நன்றாக விளையாடுவதாக தெரிவித்துள்ளார். அதனால் கேப்டன்ஷிப் செய்வது தமக்கு எளிதாக இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நாங்கள் நல்ல இலக்கை நிர்ணயம் செய்தோம்”
கேப்டன்ஷிப் ஈஸி:
“முதல் 3 – 4 ஓவர்கள் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக இருந்ததால் ரன்கள் அடிப்பது எளிதாக இல்லை. அங்கே சுதர்சன் – பட்லர் அற்புதமாக பேட்டிங் செய்தனர். எந்த நாளிலும் நாங்கள் 220 ரன்களை கட்டுப்படுத்த எடுத்துக் கொள்வோம். எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பான வேலையை செய்தனர். அனைத்து வீரர்களும் வெற்றியில் பங்காற்றினர்”
இதையும் படிங்க: வெர்சட்டைல் பேட்ஸ்மேனா இருக்க இதை செய்றேன்.. ராஜஸ்தானை வீழ்த்திய திட்டம் பற்றி.. ஆட்டநாயகன் சுதர்சன் பேட்டி
“ஆட்டநாயகன் விருதுக்கு தகுதியானவரை தேர்ந்தெடுக்க உங்களுக்கு கடினம் ஏற்பட்டால் அது தான் எங்கள் அணி வீரர்கள் வெளிப்படுத்தும் பங்களிப்பின் தரமாகும். இது போன்ற பவுலர்கள் இருக்கும் போது கேப்டன்ஷிப் எளிதாகி விடும். நான் யாரைக் கொண்டு வந்தாலும் அவர்கள் மகிழ்ச்சியுடன் வெற்றியில் பங்காற்றத் தயாராக உள்ளனர். இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இஷாந்த் சர்மா பாய் போன்ற தரமான வீரர்கள் எங்களிடம் உள்ளனர்” என்று கூறினார்.



