ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் இரண்டாம் தேதி நடைபெற்ற 14வது போட்டியில் பெங்களூருவை அதன் சொந்த மண்ணில் குஜராத் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து போராடி 20 ஓவரில் 169-8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக லியாம் லிவிங்ஸ்டன் 54, ஜிதேஷ் சர்மா 33 ரன்கள் எடுத்தனர்.
குஜராத் அணிக்கு அதிகபட்சமாக முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக விளையாடிய குஜராத் அணி மிகவும் நேர்த்தியாக விளையாடி 17.5 ஓவரில் 170-2 ரன்கள் எடுத்து தங்களது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்வது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 49, ஜோஸ் பட்லர் 73*, ரூதர்போர்ட் 30* ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார்கள்.
குஜராத் வெற்றி:
இந்நிலையில் மிகவும் சிறிய சின்னசாமி மைதானத்தில் பொதுவாக 250 ரன்கள் அடித்தால் கூட வெற்றிக்கு போதாது என்று குஜராத் கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட மைதானத்தில் ஆரம்பத்திலேயே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவி கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். அதைப் பயன்படுத்தி ஆரம்பத்திலேயே மூன்று விக்கெட்டுகள் எடுத்தது பெங்களூருவை 200 ரன்கள் கூட தொடவிடாமல் வெற்றிக்கு உதவியதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது பற்றி கில் பேசியது பின்வருமாறு. “இந்த மைதானத்தை நாங்கள் பார்த்துள்ளோம். இந்த மைதானத்தில் எதிரணியை 170 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது மிகவும் சிறந்த முயற்சி. இங்கே உங்களால் 250 ரன்களும் அடிக்க முடியும். இந்த பிட்ச்சில் சில நேரங்களில் சில உதவி கிடைத்தது. குறிப்பாக முதல் 7 – 8 ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏதோ ஒரு ஆதரவு இருந்தது”
கில் மகிழ்ச்சி:
“அதைப் பயன்படுத்தி ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை எடுத்தால் நாங்கள் போட்டியில் வெற்றியை பிடிக்க முடியும் என்று நினைத்தோம். சில கேட்ச்கள் தவற விட்டது ஏமாற்றத்தைக் கொடுத்தது. ஆனால் அதையும் தாண்டி மீண்டும் வந்து போட்டியை பிடிக்க முயற்சித்தோம். இது போன்ற ஆடுகளத்தில் நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்து சேசிங் செய்தோம்”
இதையும் படிங்க: போட்டியின் ஆரம்பத்திலே இப்படி நடந்தா ஜெயிக்குறது ரொம்ப கஷ்டம்.. முதல் தோல்விக்கு பின்னர் – ரஜத் பட்டிதார் வருத்தம்
“இவை அனைத்தும் சூழ்நிலைக்குத் தகுந்தார் போல உங்களை உட்படுத்திக் கொண்டு விளையாடுவதைப் பற்றியதாகும். அடுத்த போட்டியில் பிட்ச் வித்தியாசமாக இருக்கலாம். அதற்குத் தகுந்தார் போல் நாங்கள் எங்களை உட்படுத்திக் கொண்டு விளையாடி வெற்றிக் காண முயற்சி செய்வோம்” என்று கூறினார்.



