IND vs WI : எல்லா நாட்டுலயும் அஹமதாபாத் மாதிரி பிட்ச் கிடைக்கும்னு எதிர்பாத்தா எப்டி? கில்லுக்கு – முன்னாள் இந்திய வீரர் அட்வைஸ்

Shubman-Gill
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்வியை சந்தித்த இந்தியா முக்கியமான 3வது போட்டியில் வென்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. முன்னதாக இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அறிமுகமாக வாய்ப்பு பெற்ற திலக் வர்மாவை தவிர்த்து எஞ்சிய அனைத்து பேட்ஸ்மேன்களும் சுமாராக செயல்பட்டது இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. குறிப்பாக உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் தொடக்க வீரர் சுப்மன் கில் அடித்து நொறுக்குவதற்கு பதிலாக இந்த சுற்றுப்பயணம் முழுவதுமே தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறார்.

கடந்த 2018 அண்டர்-19 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் தொடர் நாயகன் விருது வென்று சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 2021இல் பதிவு செய்த மறக்க முடியாத காபா வெற்றியில் 91 ரன்கள் அடித்து 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் கோப்பையை வெல்லும் அளவுக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டார். அதனால் நிலையான வாய்ப்புகளைப் பெற்ற அவர் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் தொடர் நாயகன் விருது வென்று இலங்கை, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு எதிராக கடந்த 6 – 8 மாதங்களில் சொந்த மண்ணில் நடைபெற்ற 3 வகையான தொடர்களிலும் சதங்களை அடித்து மிகச் சிறப்பாக செயல்பட்டார்.

- Advertisement -

அஹமதாபாத் பிட்ச் கிடைக்காது:
அதே வேகத்தில் ஐபிஎல் 2023 தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு ஆரஞ்சு தொப்பியை வென்ற அவரை சச்சின், விராட் கோலி ஆகியோரது வரிசை இந்திய பேட்டிங் துறையின் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்கள் பாராட்டினர். ஆனால் அதன் பின் லண்டன் ஓவலில் நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் சொதப்பிய அவர் பலவீனமான அணியாக இருந்தாலும் சவாலான மைதானங்களை கொண்ட இந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் 3 வகையான தொடர்களிலும் கிடைத்த 9 வாய்ப்புகளில் ஒரு அரை சதம் மட்டுமே அடித்து சுமாராக செயல்பட்டு வருகிறார்.

அதை விட ஆரம்பம் முதலே டி20 கிரிக்கெட்டில் தடுமாறி வந்த அவர் கடந்த பிப்ரவரியில் தமக்கு பிடித்த அகமதாபாத் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக 126 ரன்கள் அடித்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். ஆனால் அந்த ஒரு போட்டியை தவிர்த்து எஞ்சிய மைதானங்களில் விளையாடிய 8 டி20 போட்டுகளில் வெறும் 92 ரன்களை மட்டுமே எடுத்துள்ளதால் வண்டி அகமதாபாத் மைதானத்தில் மட்டுமே ஓடும் என்று நிறைய ரசிகர்கள் அவரை விமர்சிக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் அனைத்து நாடுகளிலும் அகமதாபாத் போன்ற மைதானங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது என தெரிவிக்கும் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் மெதுவான பிட்ச்களில் சற்று பொறுமையுடன் இருந்து சூழல்களை புரிந்து கொண்டு விளையாடுமாறு சுப்மன் கில்லுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார். மேலும் சாதாரணமாகவே டி20 கிரிக்கெட்டில் பவர் பிளே ஓவர்களில் அடித்து நொறுக்கும் மனநிலையுடன் பேட்டிங் செய்யாமல் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் அவருடைய பேட்டிங் இருப்பதாக அதிருப்தியை வெளிப்படுத்தும் ஜாஃபர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இருக்கும் மைதானங்கள் இப்படித்தான் இருக்கும். அதில் நீங்கள் சற்று காத்திருக்க வேண்டும். மாறாக சுப்மன் விருப்பத்திற்கேற்றார் போல் பந்தின் ரைசில் அடிக்க முடியாது. அதை விட அனைத்து இடங்களிலும் அகமதாபாத் போன்ற சூழ்நிலைகள் நமக்கு கிடைக்காது என்பதை முதலில் அவர் புரிந்து கொள்ள வேண்டும். எனவே மற்ற மைதானங்களுக்கு ஏற்றார் போல் தம்மை உட்படுத்திக் கொள்ளும் திறமையை கற்றுக் கொண்டால் அது அவருக்கு அதிசயங்களை நிகழ்த்தும்”

இதையும் படிங்க:தல போல வருமா, கேப்டனாக சுயநலமின்றி எம்எஸ் தோனி நடந்து கொண்ட 3 தருணங்கள் (வீடியோவுடன் சிறப்பு பதிவு)

“மேலும் இத்தொடரில் ஜெய்ஸ்வால் ஆக்ரோஷமான அணுகுமுறையுடன் விளையாடுகிறார். ஆனால் சுப்மன் கில் துடுப்பாட்ட முறையை பின்பற்றுவதாக நான் கருதுகிறேன். ஒருவேளை 2 – 3 நல்ல ஷாட்களை அடித்து நல்ல துவக்கத்தை பெரும் பட்சத்தில் அது அவருடைய ஆட்டத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து இன்று நடைபெறும் 4வது போட்டியில் தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள வெஸ்ட் இண்டீஸை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இந்தியா எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement