
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் போது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 30 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியிடம் தோல்வியை சந்தித்து இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்க அணி முதல் டெஸ்ட் வெற்றியையும் பதிவு செய்து அசத்தியுள்ளது.
இந்த முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் மூன்று பந்துகளை சந்தித்து நான்கு ரன்கள் அடித்திருந்த சுப்மன் கில் கழுத்து வலி காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் மூலம் மைதானத்திலிருந்து வெளியேறினார். பின்னர் அவருக்கு இந்திய அணியின் மருத்துவக்குழு உதவியாளர்கள் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருந்தாலும் தொடர்ச்சியாக அவர் கழுத்து வலியால் சிரமப்பட்டார் என்றும் கூறப்பட்டது. பின்னர் போட்டியின் இரண்டாம் நாள் மாலை மைதானத்தில் இருந்து வெளியேறிய சுப்மன் கில் ஆம்புலன்ஸ் உதவியின் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அப்படி அவர் சிகிச்சை பெற்ற போது அறிக்கை ஒன்றினை வெளியிட்ட பி.சி.சி.ஐ குறிப்பிட்டதாவது : சுப்மன் கில் கழுத்து வலி காரணமாக அவதிப்பட்டு வருகிறார் என்றும் அதன் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியின் எஞ்சியுள்ள நாட்களில் அவர் விளையாட மாட்டார் என்றும் அறிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து சுப்மன் கில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் கொல்கத்தா மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து சுப்மன் கில் தற்போது வீடு திரும்பியிருந்தாலும் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கேமரூன் கிரீனை விட சி.எஸ்.கே அணி அந்த வெஸ்ட் இண்டீஸ் வீரரை தேர்வு செய்தால் நல்லா இருக்கும் – அஷ்வின் கருத்து
இதன் காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. ஒருவேளை அடுத்த டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் விளையாடவில்லை என்றால் இந்திய அணியை ரிஷப் பண்ட் தலைமை தாங்குவார் என்றும் தெரிகிறது.