
இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் போது பேட்டிங் செய்கையில் கழுத்து வலி காரணமாக மூன்று பந்துகளை மட்டுமே சந்தித்த நிலையில் மைதானத்தில் இருந்து வெளியேறினார். பின்னர் அவருக்கு இந்திய அணியின் மருத்துவக்குழு முதலுதவி சிகிச்சை அளித்தாலும் அவர் கடுமையான வலியால் மீண்டும் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய வரவில்லை.
பின்னர் போட்டியின் இரண்டாம் நாள் அன்று மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட அவர் எஞ்சியிருந்த மூன்று நாட்கள் ஆட்டத்தில் இருந்தும் வெளியேறினார். அதன்பின்னர் மருத்துவமனையில் சிகிச்சையை மேற்கொண்ட பிறகு இந்திய அணியுடன் கௌகாத்தி நகருக்கு பயணித்திருந்தாலும் முன்னெச்சரிக்கை காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடவில்லை.
அவருக்கு பதிலாக தற்போது ரிஷப் பண்ட் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் எதிர்வரும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் பங்கேற்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இவ்வேளையில் தற்போது வெளியாகியுள்ள மருத்துக்குழு அறிக்கையின் படி : அவர் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக ஒருநாள் தொடர் மட்டுமின்றி டி20 தொடரையும் தவறவிட இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அதோடு இந்த ஆண்டு முழுவதும் அவர் எந்த போட்டியிலும் பங்கேற்க முடியாது என்றும் கூறப்படுகிறது.
மேலும் அவர் குணமடைய இரண்டு மாதங்கள் வரை ஆகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏனெனில் அவருக்கு ஏற்பட்டுள்ளது வெறும் கழுத்து வலி மட்டுமல்ல கழுத்து நரம்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தான் என்றும் உறுதி செய்யபட்டுள்ளது. இதன் காரணமாக அவர் படிப்படியாக அந்த காயத்திலிருந்து குணமடைவார் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : தெ.ஆ அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான கேப்டன் யார்? சுப்மன் கில் பங்கேற்பது சந்தேகம் – விவரம் இதோ
அதற்கு குறைந்தது எட்டு வாரங்களாவது ஆகும் என்பதனால் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் அவர் எவ்வித போட்டிகளிலும் பங்கேற்க முடியாது என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரை அவர் முற்றிலுமாக தவறவிட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.