ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் இந்திய அணியானது தங்களது முதலாவது லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி இந்த தொடரை வெற்றியுடன் அமர்க்களமாக ஆரம்பித்தது. அதனை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்த்து செப்டம்பர் 14-ஆம் தேதியான இன்று துபாய் மைதானத்தில் நடைபெற இருக்கும் போட்டியில் விளையாட இருக்கிறது. இதற்காக இந்திய அணியின் வீரர்கள் கடந்த சில நாட்களாகவே தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
பயிற்சியின் போது காயமடைந்த சுப்மன் கில் :
இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக பொறுப்பேற்று செயல்பட்டு வரும் சுப்மன் கில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னர் தற்போது பயிற்சியில் காயமடைந்ததாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்கையில் சுப்மன் கில்லுக்கு விரலில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வலைப்பயிற்சியின் போது சுப்மன் கில் காயத்தை சந்தித்ததும் உடனடியாக மைதானத்திற்கு ஓடி வந்த பிசியோதெரபிஸ்ட் அவருக்கு முதலுதவி வழங்கினார். இருந்தாலும் சுப்மன் கில் வலியால் துடிப்பதை பார்த்த பயிற்சியாளர் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் ஓடி சென்று அவரிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவருடைய நண்பரான அபிஷேக் சர்மாவும் வாட்டர் பாட்டிலை திறந்து கொடுத்து அவருக்கு உதவி செய்திருந்தார். அந்த நேரத்தில் சுப்மன் கில் கடுமையான வலியில் இருந்தது தெளிவாக வீடியோக்களில் பதிவானது. பின்னர் அவர் பாதியிலேயே பயிற்சியை நிறுத்தி வெளியேறினார். ஆனால் அதன்பிறகு சிறிது நேரத்தில் மீண்டும் ஆசுவாசப்படுத்திக் கொண்டு வலை பயிற்சிக்குள் வந்த கில் வேகப்பந்து வீச்சாளர்கள், சுழற்பந்து வீச்சாளர்கள் என இரண்டு தரப்பினரையும் எதிர்கொண்டு பேட்டிங் பயிற்சி செய்திருந்தார்.
இதன் காரணமாக அவரது காயம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதனால் நிச்சயம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது. சமீபகாலமாகவே மிகச் சிறப்பான ஃபார்மில் விளையாடி வரும் அவர் ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியிலும் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றிருந்தார்.
இதையும் படிங்க : அசத்தலான சாதனையுடன் வங்கதேச அணியை வீழ்த்தி அசத்திய இலங்கை அணி – விவரம் இதோ
இவ்வேளையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் அவரது சிறப்பான ஆட்டம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான மிக முக்கியமான போட்டி இன்று இரவு துபாய் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.



