அவர் சிக்ஸர் அடிப்பதை பார்க்கும் போது தோனியை பார்க்கிற மாதிரியே இருக்கு – இளம் வீரரை பாராட்டும் சஞ்சய் மஞ்ரேக்கர்

Sanjay
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் போராடி த்ரில் வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. ஜனவரி 18ஆம் தேதியன்று ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவரில் 349/8 ரன்கள் குவித்து அசத்தியது. கேப்டன் ரோகித் சர்மா விராட் கோலி உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் அதிகபட்சமாக தொடக்க வீரராக களமிறங்கி நியூசிலாந்து பவுலர்களை வெளுத்து வாங்கிய சுப்மன் கில் 19 பவுண்டரி 9 சிக்சருடன் இரட்டை சதமடித்து 208 (149) ரன்கள் விளாசினார்.

அதை தொடர்ந்து 350 ரன்களை துரத்திய நியூசிலாந்து டேவோன் கான்வே, கேப்டன் டாம் லாதம் உள்ளிட்ட முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை சொற்ப ரன்களில் இழந்து 131/6 என சரிந்து ஆரம்பத்திலேயே தோல்வியின் பிடியில் சிக்கியது. இருப்பினும் 7வது விக்கெட்டுக்கு யாருமே எதிர்பாராத வகையில் ஜோடி சேர்ந்து இந்திய பவுலர்களை அடித்து நொறுக்கி 162 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த மைக்கேல் பிரேஸ்வெல் 12 பவுண்டரி 10 சிக்சருடன் 140 (78) ரன்களும் மிட்சேல் சாட்னர் 57 (45) ரன்களும் குவித்து போராடி கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

தோனி மாதிரி:
அதனால் தோல்வியிலிருந்து தப்பிய இந்தியாவுக்கு அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகள் சாய்த்தார். இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரராக உலக சாதனை படைத்த சும்மன் கில் ஆட்டநாயகன் விருதை வென்றார். 2018 அண்டர்-19 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் தொடர் நாயகன் விருது வென்று சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 2021இல் மறக்க முடியாத காபா வெற்றியில் 91 ரன்கள் குவித்து நம்பிக்கை கொடுத்தார்.

அதன் பின் 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் அணி முதல் வருடத்திலேயே கோப்பையை வெல்லும் அளவுக்கு பேட்டிங்கில் அசத்திய அவர் இந்திய அணியில் மீண்டும் கம்பேக் கொடுத்தார். அதில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடர்களில் அடுத்தடுத்த தொடர் நாயகன் விருது வென்று வெற்றிகளில் பங்காற்றிய அவர் கடந்த மாதம் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் சதமடித்தார். அத்துடன் சமீபத்திய இலங்கை தொடரிலும் சதமடித்திருந்த அவர் தற்போது அடுத்தடுத்த சதங்களை விளாசி ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய பேட்டிங் துறையின் அடுத்த சூப்பர் ஸ்டாராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

முன்னதாக ஐபிஎல் போன்ற டி20 கிரிக்கெட்டில் பெரிய ரன்களை குவித்தாலும் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை குவிப்பது மட்டுமே அவருடைய ஒரு பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் அதில் முன்னேறி வரும் அவர் தற்போது ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மாவுடன் இணைந்து இதுவரை பெற்ற வாய்ப்புகளில் பெரும்பாலான போட்டிகளில் அதிரடியான தொடக்கத்தை கொடுத்து வருகிறார். குறிப்பாக நேற்றைய போட்டியில் 182 ரன்களில் இருந்த அவர் நியூசிலாந்தின் அதிவேக பந்து வீச்சாளர்களில் ஒருவரான லாக்கி பெர்குசன் வீசிய ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் சேவாக் போல் பயப்படாமல் இரட்டை சதத்தை தொட்டது ரசிகர்களை வியக்க வைத்தது.

அந்த வகையில் தம்மாலும் அதிரடியான வேகத்தில் அதிரடியான சிக்ஸர்களை பறக்க விட முடியும் என்று நிரூபித்துள்ள அவரை பார்க்கும் போது இளம் வயது தோனியை பார்ப்பது போல் உள்ளதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். 2004இல் அறிமுகமான காலத்தில் வர்ணையாளராக செயல்பட்ட தம்மிடம் நேராக தம்மால் தொடர்ந்து சிக்சர் அடிக்க முடியும் என்று தோனி நம்பிக்கையுடன் தெரிவித்ததை சஞ்சய் மஞ்ரேக்கர் நினைவு கூர்ந்துள்ளார். அதே போன்ற திறமை கில்லிடம் இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: 3 விதமான கிரிக்கெட்லயும் பிரமாதமா ஆடுறாரு. அவரோட பவுலிங் நமக்கு பெரிய ப்ளஸ் – ரோஹித் புகழாரம்

“தோனியை முதல் முறையாக நான் பார்த்த போது அவர் பெரும்பாலும் நேராக தான் சிக்ஸர்களை அடித்தார். மேலும் அதிரடியாக விளையாடும் போது தம்மால் தொடர்ச்சியாக அசத்த முடியும் என்றும் அவர் என்னிடம் தெரிவித்தார். தற்போது கில்லிடம் அதே போன்ற திறமை பரிசாக உள்ளது. அவரது வருங்காலத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

Advertisement