
மான்செஸ்டர் நகரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 387 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61, ஜெய்ஸ்வால் 58, ரிஷப் பண்ட் காயத்துடன் விளையாடி 54 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.
அடுத்து விளையாடிய இங்கிலாந்து அபாரமாக பேட்டிங் செய்து 669 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 150, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 141 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்ததாக 311 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
அதனால் 0/2 என இந்தியா ஆரம்பத்திலேயே திணறிய போது ராகுல் மற்றும் கேப்டன் கில் ஆகியோர் ஜோடி சேர்ந்து நங்கூரமாக விளையாடினர். 4வது நாள் முழுவதும் விக்கெட்டை விடாமல் இந்தியாவை காப்பாற்றிய அந்த ஜோடி ரசிகர்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்தனர். இன்று துவங்கிய கடைசி நாளிலும் தொடர்ந்து அசத்திய அந்த ஜோடியில் ராகுல் 90 ரன்களில் ஸ்டோக்ஸ் வேகத்தில் சதத்தை நழுவ விட்டு அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.
இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய கில் சதத்தை அடித்ததால் இந்தியாவை காப்பாற்றுவார் என்று ரசிகர்கள் நம்பினார். ஆனால் அப்போது ஆர்ச்சர் வேகத்தில் 103 ரன்களில் அவர் அவுட்டாகி ஏமாற்றத்துடன் வெளியேறினார். அதனால் 5வது நாள் உணவு இடைவெளியில் 223/4 என விளையாடும் இந்தியா டிரா செய்யுமா என்ற கலக்கம் ரசிகர்களுடன் ஏற்கப்பட்டுள்ளது.
களத்தில் சுந்தர் 21*, ஜடேஜா 0* ரன்களுடன் உள்ளார்கள். முன்னதாக இந்தப் போட்டியில் 1990ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கருக்கு பின் 35 வருடங்கள் கழித்து மான்செஸ்டர் மைதானத்தில் சதத்தை அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை கில் படைத்துள்ளார். அத்துடன் இத்தொடரில் மொத்தமாக அவர் 4 சதங்களை அடித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவின் ஹீரோயிஷத்தை வீணாக்குவதே கம்பீரின் அந்த தவறான செலக்சன் தான்.. சஞ்சய் மஞ்ரேக்கர் விளாசல்
இதன் வாயிலாக டான் ப்ராட்மேன் (1947/49இல் இந்தியாவுக்கு எதிராக), சுனில் கவாஸ்கர் (1978/79இல் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக) ஆகியோருக்குப் பின் ஒரே தொடரில் 4 சதங்களை அடித்த கேப்டன் என்ற உலக சாதனையை கில் சமன் செய்துள்ளார். மேலும் இங்கிலாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் 4 சதங்கள் அடித்த வீரர் என்ற ப்ராட்மேன் உலக சாதனையையும் கில் சமன் செய்துள்ளார். இதற்கு முன் இங்கிலாந்தில் நடைபெற்ற 1930 ஆஷஸ் தொடரில் பிராட்மேன் சாதாரண பேட்ஸ்மேனாக 4 சதங்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.